பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உண்மையான ஹீரோ!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கி வரும் சாகித் அப்ரிடியோ அல்லது மிஸ்பா உல் ஹக்கோ பாகிஸ்தான் அணியின் ஹீரோக்களாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை தயவு செய்து மாற்றி விடுங்கள். உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிஜ ஹீரோ அந்த நாட்டின் மாற்றுத்திறனாளி அணியில்தான் உள்ளார்.

ஃ பாரா சயீத்… இந்த பெயரை கேட்டாலயே பேட்ஸ்மேன்கள் அலறுகின்றனர். ஒரு காலில்லாத நிலையில் மின்னல் வேகத்தில் வந்து அதிர அதிர பந்து வீசும் ஃபாரா சயீத்தின் பந்துவீச்சு அப்படியே பழைய சோகைப் அக்தரை நினைவுபடுத்துகிறது. பந்தை தொட்டால் ‘அவுட்’ தொடவிட்டால் ஸ்டம்ப் எகிறும்… அந்த அளவுக்கு துல்லியம். ஃபாரா சயீத்துக்கு 2 வயதாக இருந்தபோது போலியோ தாக்கியதில் இடது கால் செயல் இழந்து விட்டது. 

சிறு வயது முதலே ஃபாரா சயீத்துக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பதுதான் கனவு. அதற்காக கடினமாக உழைத்தார். இன்று பாகிஸ்தான் மக்களின் ஹீரோ ஆகி விட்டார். ஒரு கால் இல்லாத நிலையிலும் சாதாரண வேகப் பந்துவீச்சாளர் போல ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துவீசுவதுதான் பாரா சயீத்தின் ஸ்பெஷல்.

ஃபாரா சயீத்தின் வேகப்பந்து வீச்சை பாகிஸ்தான் அணியின் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் கூட எதிர்கொள்ள திணறியிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் ஃபாரா சயீத்தை மிகச்சிறந்த பந்துவீச்சாளராக பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. இதற்காக பல பந்துவீச்சாளர்களிடம் அவரை பயிற்சி பெற வைத்தனர். இதன் விளைவாக ஃபரா சயீத்தின் பந்துவீச்சு மெருகேறி இன்று பாகிஸ்தான் மாற்றுத்திறனாளிகள் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக அவரை மாற்றியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் மாற்றுத்திறனாளிகள் அணி சர்வதேச போட்டிகளில் பஙகேற்ற போது, ஃபாரா சயீத் பந்துவீசுவதை நேரில் கண்ட முன்னாள் ஐ.சி.சி. தலைவர் ஹாரூன் லோர்கத், ”ஃபாரா சயீத்தின் பந்துவீச்சை நேரில் கண்டதுதான் நான் ஐ.சி.சி. தலைவராக இருந்து சாதித்தது. வேறு எதுவும் நான் செய்யவில்லை” என்று மனம் திறந்து பாராட்டினார்.

ஃபாரா சயீத் தனது பந்து வீச்சு குறித்து கூறுகையில், ”தொடக்கத்தில் தெருவில் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். அவர்கள் எனது பந்துவீச்சை எதிர்கொள்ள தயங்குவார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கா நாம பந்துவீசுகிறோம் என்று மனதில் எண்ணிக்கொள்வேன். இதுவே நாளைடைவில் சிறந்த பந்துவீச்சாளராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எனது மனதிற்குள் விதைத்தது. தீவிர பயிற்சி செய்தேன்” என்றார்.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் அடி வாங்கினாலும்… ஃபாரா சயீத் போன்ற வீரர்களை உருவாக்கியுள்ளதற்காக தாராளமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

Advertisement

Close