பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் மார்க்கத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு!

பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்டங்கள் கைவிடப்படுவதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க பொது செயலாளர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015- 2016ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கான கட்டணம் உயர்வு இல்லை என்பது வரவேற்கத்தக்கது. தஞ்சை மெயின் லைனில் இயக்கப்பட்ட ரயில்களில் தற்போது 2 மட்டுமே செல்கிறது. மற்ற தினசரி ரயில்களான மதுரை- திருப்பதி, (ஜனதா) தூத்துக்குடி- சென்னை விரைவு ரயில்களும், செங்கோட்டை- சென்னை, தஞ்சாவூர்- சென்னை, திருச்சி- செங்கல்பட்டு, தஞ்சாவூர்- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் அகல பாதைக்காக ரத்து செய்யப்பட்டது. அவைகள் மீண்டும் இயக்கப்படாததால் மெயின் லைனில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி- நெல்லை இன்டர்சிட்டி அதிவிரைவு வண்டியை மயிலாடுதுறை வரையிலும், காலை நேரத்தில் சென்னைக்கு அதிவிரைவு ரயில் ஒன்றும் மெயின் லைனில் கேட்டு மனுக்கள் வாயிலாகவும், ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் தெரிவித்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.

பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டை – தஞ்சை – அரியலூர், கும்பகோணம்- விருத்தாசலம்- சேலம் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசின் அமைச்சரவையில் பங்குபெற்ற மூர்த்தியால் ஏற்று கொள்ளப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ரயில்வே பட்ஜெட்டில் பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் மார்க்கம், கும்பகோணம்- விருத்தாசலம்- சேலம் மார்க்கம் புதிய பாதைகள் கைவிடப்பட்டதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் பயனாக தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வரை இடம் சர்வே செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணியும் நிறைவடைந்துவிட்டது.  ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எனவே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ரயில் திட்டங்களையும் மக்களின் நலன்கருதி பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:தினகரன் 

Advertisement

Close