Adirai pirai
Dr.Pirai

உணவே மருந்து !

அதிரை பிறை  - அதிரை சாலிஹ் - Adirai Salih

சுக்கு:

அன்றாடச் சமையலில் கூட்டுவனவற்றுள் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது.

சுக்கு இதற்குத்தான் உபயோகிக்கலாம்; இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கு வேண்டுமானாலும் யாவரும் பயன்படுத்தக் கூடிய எளிய ஆனால் உயர்ந்த வஸ்து. அகத்தியர் இதனை ‘ஈதுக்குதவும் தீதுக்குதவா தென்றோரு விதியிலை நவசுறு குணமிதுவே’ என்றார் நவசுறு எனில் சுக்கு. பெரிய குடும்பத்தில் தலைவன் ஒரு தந்தையாக இருந்த போதிலும் முதல் மருமகளாக வாய்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு பெருமையும், பொறுப்பும் உள்ளதோ? அத்தகைய மதிப்பினை மக்கள் சமுதாயத்தில் இந்த சுப்பிரமணி பெற்றுள்ளது.

உடல் உற்ற வாய்வை எல்லாம் அகற்றிவிடும். வாத ரோகங்கள் யாவும் போகும். பசியைத் தூண்டும். மன அகங்காரத்தை ஒடுக்கும்; சிர நோய், சீதளம், வாத குன்மம், வயிற்றுக்குத்தல், நீர் பீனிசம், நீரேற்றம், சலதோடம், கீல்பிடிப்பு, ஆசன நோய், தலைவலி, பல்வலி, காதுகுத்தல், சுவாசரோகம் ஆகிய எல்லா வியாதிகளும் போகும். வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த சுப்பிரமணி தீர்த்து வைக்கும்.

மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் பெரு விரலில் பாதி அளவுக்கு தோல் இல்லாத சுக்கை இஞ்சியை சாப்பிட்டது போலவே சிறுக சிறுக சாப்பிட வேண்டும்.

பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல்தோல் நீக்கி நறுக்கி ஒரு குவளை நீரில் போட்டுக் காய்ச்சி சிறிது பால் சர்க்கரை கலந்து தினமிரு வேளை குடித்துவர மேல்கண்ட நோயெல்லாம் விலகும்.

சுக்கு ஒரு பழங்கா பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி.

சுக்கு – சித்தர்கள் கண்டுபிடித்த பென்சிலின் என்றால் மிகையல்ல!

கடுக்காய்:

மாலையில் அதேப்போல சாப்பிட அரை மணி நேரம் முன் கடுக்காயை அரை கடுக்காயை விதை இல்லாமல் வாயில் போட்டு வைத்தால் அது அவ்வளவு துவர்ப்பாக இருக்கும். இந்த கடுக்காயில்தான் அவ்வளவு மகிமையும் உள்ளது. இந்த கடுக்காயை உண்பதர்க்காகத்தான் இஞ்சியையும் சுக்கையும் சாப்பிடுகிறோம். மாதக்கணக்கில் குடலில் தங்கியுள்ள மலங்களையும் அகற்ற வல்லது இந்த கடுக்காய்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் “காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..”- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.

மஞ்சள்: மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள் மஞ்சள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடவும், நெஞ்சிலுள்ள சளியை நீக்கவும், சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.

கொத்தமல்லி: அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன.

கொத்தமல்லி பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது.

கண் நோய்களான மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன. பித்தத்தைப் போக்கவும் பயன்படுகிறது.

மிளகு: அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை மிளகும், மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். சீரகமும். சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம்.

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி.

மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். தொண்டைக் கட்டை தொலைக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும்.

அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும். தொண்டைக் கட்டை தொலைக்கும்.

சீரகம்: எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகுமே… விடாவிடில் நான் தேரனும் அல்லவே’ என்று சீரகத்தின் புகழ் பாடுகிறது சித்தர் பாடலொன்று. அத்தகைய சிறப்புடையவை மிளகும் சீரகமும்.

சீர் + அகம் = சீரகம். அதாவது, உடலின் உள் உறுப்புகளை சீராக்கக் கூடியது. மிளகு இருக்கும் இடத்தில் சீரகமும் கட்டாயம் இடம்பெறும்.

சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது.

சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்கக் கூடியது. வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.

சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.

பூண்டு: நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. வியற்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும். உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு. வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை நீக்கும்.

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

வெங்காயம்: வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டது வெங்காயம்.

வெங்காயம் இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

பெருங்காயம்: சமையலில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்.

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி வெளியேற்றும், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

தேங்காய்: தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு  எந்த உணவோ… அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்…

தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல்  40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது.

சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களையும் நீர்க்கோவையை நீக்கும் சக்தி உண்டு. அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சிறந்தது.

கறிவேப்பிலை: மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். கண் பார்வை தெளிவடையும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

நல்லெண்ணெய்: எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது. மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கவும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.

நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

கீரை: கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.

உடலுக்கு வலிவூட்டவும் கழிவு அகலவும் கீரை உதவுகிறது.

தவிர்க்க வேண்டியவை: நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனைக் குறைவகச் சேர்த்தல் நன்று. உப்பு நிரைந்த பொருள்களான ஊறுகாய், அப்பளம், வடாம், கருவாடு, முந்திரிப்பருப்பு, வருத்த உருளைச் சீவல், வாழைக்காய்ச் சீவல், புளித்தமோர் முதலியனவற்றை முழுவதுமாகத் தவிர்த்தல் வேண்டும்.

கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலடை, பனிக்கூழ், இனிப்புக்கடி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். காரமும் புளிப்பும் கொண்ட உணவுகள் கூடா. எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை ஒதுக்குதல் நன்று. நொறுகத்குத் தீனி வயிற்க்குக் கேடு என்பது பழமொழி. நொறுக்குத் தீனி கூடவே கூடாது. இடையிடையே எதனையாவது தின்பதும் கொறிப்பதும் நல்லது இல்லை.

உண்ணும் முறை: எளிதில் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை, பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது. நாக்சுவை கருதி உண்ணாமல், உடல்நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்கக்கூடாது; நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும், அது செரிக்காது; குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணல் வேண்டும். வேகவைத்த காய்கறி நீரில் மிகுதியான சத்துகள் இருப்பதனால் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது: பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப் பொருள் செரிமானமாவதற்கு உமிழ் நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும். சாப்பிடும்போது அவரச அவசரமாக உட்கொள்ளாது, நிதானமும், மனதில் எந்த வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காது மகிழ்ச்சியுடன் உணவு அருந்துதல் வேண்டும். இரவு சாப்பாடு என்பதில் மிகவும் அக்கறையும் கவனமும் தேவை. மதிய உணவை விட ஒரு பிடி குறைத்தே சாப்பிடுதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு, சப்பாத்தி போன்றவையும், ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால் போன்றவற்றை அருந்தி விட்டு சுமார் 15 நிமிடங்களாவது உலாவுதல் வேண்டும். அவ்வாறு நடப்பதால் அருந்திய உணவு நன்றாய் ஜீரணம் ஆவதோடு, இரவு நித்திரையும் நன்றாக அமையும்.

தண்ணீரும் மருந்தே: நீரின்றமையாது உலகு என்பது வள்ளுவம். இயற்கை உணவுப்பொருள்களில் நீரில்லாத உணவுப்பொருள்களே இல்லை. எல்லாவகையான உணவுப் பொருள்களும் விளைவதற்குக் காரணமாக அமைவது நீர். உண்ட உணவு கருதியுடன் கலப்பதற்கும் குருதி தூய்மை அடைவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் நீர் இந்றியமையாதது. எனவே, நீரைத் தேவையான (நாலொன்றுக்குக் குறைந்தது மூன்று லிட்டர்) அளவுக்குக் குடித்தல் உடலுக்கு நல்லது. உணவு உண்ணும்போது இடையில் நீர் குடித்தல் கூடாது.

சமச்சீர் உணவு: ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு, எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. சோறும் காய்கறியும் அரைவயிறு; பால், மோர், நீர் கால்வயிறு; கால்வயிறு வெற்றிடமாக இருத்தல் வேண்டும். வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடமளிக்கும். எனவே, ஒளவையார் மீதூண் விரும்பேல் என்றார்.