Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மக்கள் என்ன ஏமாளிகளா???

அதிரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு செல்லும் இரண்டு SETC ஆம்னி பேருந்து செவைகள் துவங்கப்பட்டன. இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்று காலையிலும் மற்றொன்று மாலையிலும் சென்னைக்கு செல்லும். இதில் காலையில் புறப்படும் பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லக்கூடியது. குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல முடிவதால் பல மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

 

ஆனால் சமீப காலமாக இந்த இரண்டு பேருந்துகளில் இரவு நேரத்தில் செல்லும் பேருந்து மட்டுமே அதிரைக்கு வருகிறது. காலை அதிரையில் இருந்து சென்னை செல்லும் பேருந்து அதிரைக்கே வருவதில்லை. இந்த பேருந்து பட்டுக்கோட்டையிலேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்தே சென்னைக்கு பேருந்து சென்று வருகின்றது. தினசரி அனைத்து நேரங்களிலும் அதிரையில் இருந்து சென்னைக்கு மக்கள் சென்றுகொண்டு தான் உள்ளனர். இது போன்று அதிரைக்கென்று துவங்கப்பட்ட சேவையை வேறு பகுதிக்கு எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி இன்று மாற்றுவது கண்டிக்கத்தக்கது.

 

அதிரை வழியாக சென்னை சென்ற ரயில் சேவையை நிறுத்தி பத்தாண்டுகளை கடந்து விட்டன. தற்போது இந்த அரசு பேருந்து சேவையையும் ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அதிரைக்கு அனுப்பாமல் பட்டுக்கோட்டையிலேயே நிறுத்துவதால் அதிரை மக்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் அதிரைக்கென்று அறிவிக்கப்பட்ட பேருந்துகளை அதிரைக்கே அனுப்புமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.