மேலப்பாளையத்தில் சமீரா என்ற சிறுமியை கடத்தி கொடுமைபடுத்திய போலிஸ் எஸ்.ஐ இடமாற்றம்!

மேலப்பாளையம் ஆமீன்புரம் 5–வது தெருவை சேர்ந்தவர் முகமது அனிபா. மதுரைக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வந்த போது வெடிகுண்டு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீசாரால் முகமது கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8–ந்தேதி முகமது அனிபாவின் மூத்த மகள் முகமது சமீரா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மெகராஜ் பேகம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் மகளை தேடினார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் முகமது சமீரா வீட்டிற்கு வந்துவிட்டாள். 

சமீராவிடம் தாய் விசாரித்த போது, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவரை அழைத்துச் சென்றதாக கூறினார்.  மேலும் அவர்கள் இருவரும் தந்தை முகமது அனிபா குறித்த விவரங்களை கேட்டு சிறுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த சமீரா நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மெகராஜ் பேகம் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சித்ரவதை செய்ததாக சிறப்பு புலனாய்வு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் இன்று திடீரென மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement

Close