ஆம்பூரில் : 144 தடை உத்தரவு!

image

காணாமல் போன பெண் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்ற விசயத்தில் ஆவேசம் கொண்ட பொதுமக்களால் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவிலுள்ள ஒரு தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து பழனி, பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், ஆம்பூரைச் சேர்ந்த ஷாமில் அஹ்மது என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்புகாரின் பேரில் பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் பிரேம்ராஜ் கடந்த 15 ஆம் தேதி ஷாமிலை விசாரணைக்காக அழைத்துச் சென்றார். ஆனால் வழக்கேதும் பதியாமல் சட்ட விரோதமாக காவல்நிலையத்தில் 3 நாட்கள் வைத்து அவரைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷாமிலைக் கடந்த 19 ஆம் தேதி அவரின்
உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உணர்வற்றிருந்த ஷாமிலை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள்
கைவிட்டதால், வேலூர் அரசு
மருத்துவமனைக்கு மாற்றினர்.
அங்கும் கைவிட்டதால் பின்னர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
நிலையில் அங்குச் சிகிச்சை
பலனளிக்காமல் நேற்று முன்தினம்
அவர் மரணமடைந்தார்.
இத்தகவல் ஆம்பூரில் காட்டுத்தீயாக
பரவியதும் சம்பந்தப்பட்ட
காவல்துறை ஆய்வாளர் மற்றும்
காவலர்களைக் கைது
செய்யவேண்டுமெனக் கோரி
ஆயிரக்கணக்கானோர் ஆம்பூர்
காவல்நிலையத்தை நேற்று முன்
தினம் இரவு முற்றுகையிட்டனர்.
சம்பவமறிந்து உடனடியாக காவல்
நிலையம் வந்த மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட
காவலர்கள்மீது உரிய நடவடிக்கை
எடுப்பதாக
வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து
கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஷாமில்
அஹ்மதின் உறவினர் அளித்த
புகாரின் பேரில் ஆய்வாளர்
பிரேம்ராஜ், சிறப்பு துணை
ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்கள்
நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ்,
முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற
நடைமுறை சட்டப்பிரிவு 176 (1)
பிரிவின்கீழ் பள்ளிகொண்டா
காவல் நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விரிவான
விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு
அறிக்கை அளிக்க மாவட்ட
முதன்மை குற்றவியல் நீதிபதி
சிவகடாட்சம் உத்தரவிட்டார்.
ஆனால், சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது
கொலை வழக்கு பதிவு செய்ய
வேண்டுமெனவும் உடனடியாக
அவர்களைப் பணி நீக்கம்
செய்வதோடு அவர்களைக் கைது
செய்ய வேண்டுமெனவும் கோரி
மீண்டும் ஆயிரக்கணக்கானோர்
ஆங்காங்கே கூடி போராடத்
தொடங்கினர். இதனால் நேற்று
ஆம்பூரில் பதற்றச் சூழல்
அதிகரித்தது. இதனால் வேலூர் சரக
டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர்
செந்தில்குமாரி ஆகியோர்
ஆம்பூரில் முகாமிட்டனர்.
காவல்துறை துணை
கண்காணிப்பாளர்கள் கணேசன்,
விஜயகுமார் உள்ளிட்ட 5 மாவட்ட
துணை கண்காணிப்பாளர்கள்
தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட
காவலர்கள் மற்றும் அதிரடி
படைவீரர்களும் ஆம்பூரில்
குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு 7
மணியளவில் ஆம்பூரில் சென்னை
பெங்களூர் நெடுஞ்சாலையில்
ஆயிரக்கணக்கானோர்திரண்டனர்.
அவர்கள் காவல்நிலையம்
முன்னிலையில் ஆர்ப்பாட்டம்
செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதற்குக் காவல்துறையினர்
அனுமதிக்கவில்லை. இதனால் நேரம்
செல்லச்செல்ல பதற்றம்
அதிகரித்ததோடு கூட்டமும்
அதிகரித்தது. ரமலான் மாதமாதலால்
இரவு தொழுகைக்காக
பள்ளிவாசலுக்கு வந்தவர்கள்
அனைவரும் கூடத்தொடங்கியதால்
கூட்டத்தைக் கட்டுப்படுத்த
முடியாமல் காவல்துறையினர்
திணற ஆரம்பித்தனர்.
சம்பந்தப்பட்ட காவலர்களை
உடனடியாக பணி நீக்கம் செய்து
அவர்களைக் கைது செய்ய
வேண்டுமென்ற கோரிக்கையுடன்
காவல்நிலையம் நோக்கி ஊர்வலம்
போக முயன்றனர். அதற்குக்
காவல்துறையினர்
அனுமதிக்காததைத் தொடர்ந்து, அந்த
வழியாக வந்த அரசு பேருந்து,
லாரி, கார்கள் மீது திடீரென
கூட்டத்திலிருந்து சரமாரியாக
கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த
வாகனங்களின் கண்ணாடிகள்
நொறுங்கி விழுந்தன.
பேருந்திலிருந்த பயணிகள் 10–
க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்களைப்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களே
பாதுகாப்பாக வேறு பகுதிக்கு
அழைத்து சென்றனர்.
கூட்டம் தேசிய
நெடுஞ்சாலையிலேயே நேரம்
செல்லச் செல்ல அதிகரிக்க
ஆரம்பித்தது. இதனால்
போக்குவரத்து முழுமையாக
பாதிக்கப்பட்டது. மேற்படி
வாகனங்களைக் கடந்து செல்ல
அனுமதிக்கமாட்டோம் என
போராட்டக்காரர்கள் கூறியதும்
காவல்துறையினருக்கும்
கூட்டத்தினருக்கும் இடையே
வாக்குவாதம் முற்றி கலவரமாக
மாறியது. கூட்டத்தைக் கலைக்க
தடியடி நடத்த காவலதுறை
உத்தரவிட்டது.

இதனையடுத்து கலவரத்தில்
ஈடுபட்டவர்கள் மீது
காவல்துறையினர் தடியடி
நடத்தினர். கூட்டம் கலைந்து சிதறி
ஓடினாலும் காவல்துறையினர்
தடியடி நடத்தும் விவரம்
தெரிந்ததும் மேலும் அதிகமாக
கூட்டம் கூட ஆரம்பித்து,
காவல்துறையினருக்கு எதிராக
கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்தனர்.
இதனால் போராட்டக்காரர்களை
ஒடுக்கி கலவரத்தை கட்டுப்படுத்த
முடியாமல் காவல்துறையினர்
திணறினர். இதனையடுத்து
கூடுதல் காவலர்கள்
வரவழைக்கப்பட்டு கலவரத்தை
ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவங்களை தொடர்ந்து
வேலூரிலிருந்து பெங்களூரு,
கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர்
செல்லும் பேருந்து போக்குவரத்து
நிறுத்தப்பட்டது. அதேபோல் சேலம்,
ஓசூர், பெங்களூரு, திருப்பத்தூர்
மற்றும் கிருஷ்ணகிரி
பகுதியிலிருந்து வேலூர்
வழியாக வரும் பேருந்துகளும்
அங்கேயே நிறுத்தப்பட்டன.
நீண்ட நேரத்துக்கு வாகனங்கள் செல்ல
முடியாமல் ஆனதால் ஆம்பூர்
பேருந்து நிலையத்திலிருந்து பல
கிலோமீட்டருக்கு வாகனங்கள்
நிறுத்தியிடப்பட்டன.
இதற்கிடையில் காவல்துறையினர்
நடத்திய தடியடியில் கலைந்து
செல்பவர்கள், செல்லும் வழியில்
நின்றிருந்த வாகனங்களை எல்லாம்
அடித்து நொறுக்கினர். இதில்
சுமார் 30–க்கும் மேற்பட்ட அரசு,
தனியார் பேருந்துகள், லாரிகள்
சேதம் அடைந்தன. இதனால்
நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக
மாறியது. எவ்வளவுதான் தடியடி
நடத்தினாலும் நேரம் செல்லச் செல்ல
கூட்டம் அதிகரித்ததே தவிர
முழுவதும் கலைந்து
செல்லவில்லை. கூட்டத்தினரைக்
கட்டுப்படுத்தும் அளவுக்கான
காவலர்கள் இல்லாததால், ஒரு
கட்டத்தில் காவலர்கள் பின்வாங்க
நேர்ந்தது.
காவலர்களை விரட்டிச் சென்ற
கலவரக்காரர்கள், வழியில் ஆம்பூர்
நேதாஜி சாலையில் புகுந்து
ஆம்பூர் தாலுகா அலுவலகம்,
கிராம நிர்வாக அலுலகம்
ஆகியவற்றின் மீதும் கல்வீசி
தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து காவல் நிலையத்துக்குள்
செல்லாமல் இருக்க தாலுகா
அலுவலகம் அருகில் மணல் கடத்தல்
மாட்டு வண்டிகளை குறுக்கே
போட்டு காவலர்கள் தடை
ஏற்படுத்தினர். எனினும்,
கலவரக்காரர்கள் அதில் ஒரு மாட்டு
வண்டியை தீயிட்டு எரித்தனர்.
இதனால் அங்கிருந்தும் காவலர்கள்
பின்வாங்கி செல்ல நேர்ந்தது.
சிறிது நேரத்தில் தாலுகா காவல்
நிலைய பகுதிக்குள் நுழைந்த
கலவரக்காரரக்ள், காவல் நிலையம்
முன்பு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த விபத்தில்
சிக்கிய மினிவேனுக்குத்
தீவைத்தனர். இதில் அந்த மினி வேன்
முழுவதும் எரிந்து
சாம்பலாகியது. அதே போன்று
ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2
காவல்துறை ஜீப்களுக்கும்
போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
இதில் அந்த ஜீப்களும் முழுவதும்
எரிந்து சாம்பலாகியது. இதுதவிர
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
இரு சக்கர வாகனங்கள், டாஸ்மாக்
கடைக்கும் தீவைத்தனர்.
நள்ளிவரவைத் தாண்டி நீடித்த
இக்கலவரத்தை ஒடுக்க
ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.க்கள்
தமிழ்சந்திரன் (வேலூர்),
சத்தியமூர்த்தி (காஞ்சீபுரம்)
தலைமையில் 6 மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர்கள்
தலைமையில் மேலும் 2
ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள்
வரவழைக்கப்பட்டனர். வஜ்ரா
வாகனமும் வரவழைக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் சேர்ந்து
கலவரத்தைக் கட்டுக்குள்
கொண்டுவந்தனர். இரவு 8 மணிக்கு
தொடங்கிய கலவரம் 1 மணிவரை
நீடித்ததால் சுமார் 5 மணி நேரம்
ஆம்பூர் போர்களமாக மாறியது.
கலவரப்பகுதியில் பல இடங்களில்
கற்களும், வாகனங்களில்
உடைக்கப்பட்ட கண்ணாடிகளும்
சிதறிக்கிடந்தன. காவலர்
விரட்டியதால் தப்பி ஓடியவர்கள்
காலணிகளையும்
விட்டுச்சென்றதால் எங்கும்
காலணிகளாக காட்சி அளித்தது.
வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு
சம்பவங்கள் தொடர்பாக
காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்து இன்று காலை 200 பேரைக்
கைது செய்து செய்துள்ளனர்.
மேலும் பலரைத் தேடி வருவதாக
காவலதுறை தெரிவித்துள்ளது.
இந்தக் கலவரத்தில் பெண் காவலவர்கள்
உட்பட 15 காவலர்கள் பலத்த காயம்
அடைந்தனர். அவர்கள் வேலூர் மற்றும்
ஆம்பூர் மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலிருந்து
ஆம்பூரில் வீடுகள் தோறும்
காவலர்கள் நுழைந்து சோதனை
நடத்துவதாகவும் இதனால் மீண்டும்
அப்பகுதியில் கொந்தளிப்பு
ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. தொடர்ந்து
அங்குப் பதற்றம் நிலவி வருவதால்
கலவரம் மேலும் பரவாமல் தடுக்க
அப்பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது..

image

ு.

Close