சென்னையில் முஸ்லிம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற போலிஸ் எஸ்.ஐ க்கு அடி உதை!

TamilDailyNews_4175487756730

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற டிராபிக் போலீஸ் எஸ்.ஐ யை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம்  கோடம்பாக்கத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில்  ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாசாமகான் பகுதியை சேர்ந்தவர் அசீனா. இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்த அசீனா இரவு 8.30மணி அளவில் வீடு திரும்புவதற்காக கோடம்பாக்கம் ஹைரோடு  அருகே நடந்து வந்தார். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், அசீனாவுக்கு சாலையை கடக்க உதவுவது போல் அவரது  கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.  அதிர்ச்சி அடைந்த அசீனா பன்னீர்செல்வத்தை கண்டித்துள்ளார். அதற்கு அவர்  அசீனாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனவேதனை அடைந்த அசீனா அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில்  ஈடுபட்டிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு வந்து எஸ்ஐ பன்னீர்செல்வத்தை  தாக்கியுள்ளனர்.

மேலும் பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள்  தலைமையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு  வந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.  ‘பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட  எஸ்.ஐ. பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மேலும்  சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோடம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

courtesy: dinakaran

Close