தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு பஸ் நிலையங்களில் தனி அறை:jeyalalitha

image

தாய்ப்பால் ஊட்டும்
தாய்மார்களுக்காக பஸ் நிலையங்களில் தனி
அறைகள் திறக்கப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார். உலக
தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படும் ஆகஸ்ட்
1ம் தேதி இத்திட்டம் தமிழகத்தில் தொடங்கி
வைக்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரு
நாட்டின் வளர்ச்சி என்பது அங்கு உள்ள
பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே
அமையும். எனவே தான், எனது
தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் பெண்
குழந்தைகளுக்கென பல்வேறு திட்டங்களை
தீட்டிச் செயல்படுத்துவதோடு, பெண்களின்
முழுத்திறமையையும், ஆற்றலையும்
வெளிக்கொணரும் வகையிலான
திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில்தான், தொட்டில் குழந்தை
திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு
திட்டம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம்,
பெண்களின் சுகாதாரத்தினை பேணும்
வகையில் விலையில்லா சானிட்டரி நாப்கின்
வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார
வளாகங்கள், பெண்களுக்கு எதிரான
குற்றங்களை தடுத்திட 13 அம்ச திட்டம், 24
மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை
அளிக்கும் திட்டம்,
தாலிக்கு தங்கத்துடன் உதவித்தொகை
வழங்கும் பெண்கள் திருமண உதவித்திட்டம்,
தாய் சேய் நலன் காக்கும் வகையில் நிதி
உயர்வு அளித்து திருத்தியமைக்கப்பட்ட
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு
மகப்பேறு நிதி உதவி திட்டம், பெண்
கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள்
எழுத்தறிவுத் திட்டம், தொடர்கல்வி திட்டம்,
அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே
பள்ளிகள், கல்லூரிகள் என மகளிர் நலன்
காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை
நான் வழங்கியுள்ளேன்.
பெண்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால்,
அவர்கள் தங்களின் தலையெழுத்தை
மட்டுமல்ல; மற்றவர்களின்
தலையெழுத்தையும் மாற்ற முடியும் என்பது
எனது திடமான நம்பிக்கை. எனவே தான்,
மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு
அதிரடிப்படை, பெண்களின் பொருளாதார
நிலையை தாங்களே உயர்த்திக்கொள்ளும்
வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள்,
மகளிர் தொழில் முனைவோருக்கான
பிரத்யேக தொழிற்பேட்டைகள், பணிபுரியும்
மகளிர் விடுதிகள் அமைத்துள்ளேன்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு
விடுப்பு, உள்ளாட்சிப் பதவிகளில்
மகளிருக்கென மூன்றில் ஒரு பங்கு இட
ஒதுக்கீடு, விலையில்லா கறவைப் பசு,
வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், வீட்டில்
பணிச்சுமையைக் குறைத்து, வேலைக்கு
செல்லும் நேரத்தைப் பெறுவதற்கு வழிவகை
செய்யும் விலையில்லா மிக்சி, கிரைண்டர்
மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம் என
மகளிர் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற
திட்டங்களை நான் வழங்கி உள்ளேன்.
பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி
நேரத்திலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால்
மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்
என்பது உலகெங்கும் மருத்துவர்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். எனவே
தான், 1990 ஆம் ஆண்டு
முடிவெடுக்கப்பட்டு உலக தாய்ப்பால்
ஊட்டும் வாரம் என்பது ஆண்டுதோறும்
ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம்
தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
போதிய அளவு தாய்ப்பால் இல்லாத
மகளிரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால்
கிடைக்கப்பெற வேண்டும் என்பதன்
அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு
முன்னோடித் திட்டமாக கடந்த ஆண்டு சிறார்
நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல
மருத்துவமனையில் ‘தாய்ப்பால் வங்கி’
என்னும் திட்டம் எனது உத்தரவின் பேரில்
துவங்கப்பட்டது. பணிபுரியும் மகளிர்
தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளை
கருத்தில் கொண்டு இந்த ஆண்டை உலக
தாய்ப்பால் ஊட்டும் வாரத்தில்
கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில்
பணிபுரியும் மகளிருக்கு உள்ள
இடர்பாடுகளை களையும் வகையிலான
நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும். இதனை கருத்தில்
கொண்டு தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு
அதற்கான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்
என்பது எனது அவா ஆகும். பாலூட்டும்
தாய்மார்கள் பணி மற்றும் பயணம்
நிமித்தமாக வெளியே செல்லும் போது
பேருந்து நிலையங்களில் காத்திருக்க
வேண்டியுள்ளது. தங்கள்
இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ
அல்லது தாங்கள் செல்ல விரும்பும்
இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள்
தேவைப்படும்.
எனவே, பேருந்து நிலையங்களில்
காத்திருக்கும் வேளைகளில் அன்னையர்
தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில்
வசதியாக பாலூட்டும் வகையில் அரசு
பேருந்து முனையங்கள் நகராட்சி மற்றும் நகர
பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து
பணிமனைகளுடன் கூடிய பேருந்து
நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும்
தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்க நான்
உத்தரவிட்டுள்ளேன். இந்த புதிய திட்டம்
இந்த ஆண்டு உலக தாய்ப்பால் ஊட்டும்
வாரமான ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள்
துவங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற நடைமுறை
ஏற்கனவே நாகர்கோயில் நகராட்சி பஸ்
நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. போடி பஸ் நிலையத்தில்
ஆரம்பிக்கப்பட்டு, மூடு விழா கண்டது.
குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு
பஸ்களில் தனி இருக்கையை ஏற்படுத்த
வேண்டும் என்பது மகளிர் கோரிக்யைாகும்.

Close