திருவிதாங்கோடு

அதான் அழைப்புக் கேட்டு
கோடு கிழித்துக் கிடைத்த
திரு அதான் கோட்டில்
இன்றைய நோன்பு திறப்பு !

பெயரிலியே திருவை வைத்திருக்கும் திருவிதாங்கோட்டிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது ?

சேரமான் பெருமாள் மன்னரின் உறவினன் கோலேகா என்பவன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். இது மனிதர்கள் யாரும் வாழாத காட்டுப் பகுதியாக அப்போது இருந்தது. அங்கே வன விலங்குகளை வேட்டையாடுவது கோலேகாவின் பொழுதுபோக்கு.

ஒருநாள் அவன் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது அவன் அதுவரை அறிந்திராத ஒரு மொழியில் அழைப்போசை ஒன்று கேட்டது. யார் அப்படி அழைப்பது என்று புரியாமல் கோலேகா வேட்டையை நிறுத்திவிட்டு அங்குமிங்கும் தேடினான்.
அரபு உடை தரித்த ஒருவர் தன் சகாக்கள் சூழ அங்கே நின்றுகொண்டு பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்கள் யாரென்று தெரியாமல் அவன் தவிப்பதைக் கண்ட அந்தப் பெரியார் தன் பெயர் மாலிக் முஹம்மது என்றும் சேரமான் பெருமாள் மன்னர் தங்களை இங்கே அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறி மன்னர் தந்த கடிதத்தையும் கோலேகாவிடம் கொடுத்தார்.
மனம் மகிழ்ந்த கோலேகா தனது அம்பால் ஒரு கோடு கிழித்து அங்கே பள்ளிவாசல் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியதோடு அதை சுற்றியுள்ள ஏராளமான இடங்களையும் அன்பளிப்பாக வழங்கினான்.

மாலிக் முஹம்மது அவர்கள் மாலிக் இப்னு தினாரின் சகோதரர் மகன்.
அரேபியாவுக்குச் சென்று முஸ்லிமான சேரமான் பெருமாள் மன்னர் மாலிக் தினாரையும் அவரது குழுவையும் கேரளாவுக்கு இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பி வைத்தார். மாலிக் முஹம்மது அவர்கள் இங்கே வந்து பாங்கு சொல்லி மன்னன் கோலேகா கோடுபோட்டு இடம் கொடுத்ததால் இந்த இடம் அதான் கோடு என்று அழைக்கப்பட்டது . பின்னர் திருவும் சேர்ந்து திரு அதான் கோடு என்றாகி இப்போது திருவிதாங்கோடு என்று அழைக்கப்படுகிறது.

இன்று இந்த ஊரில் 12000 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் வாழுகின்றார்கள் என்றால் அன்று மாலிக் முஹம்மது அவர்கள் சொல்லிய பாங்கும் கோலேகா போட்ட கோடும் அதற்கு அடித்தளமாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெயருக்குத் தகுந்தாற்போல் திருவிதாங்கோடு எல்லா திருவும் பெற்று செழிப்பாகத் திகழ்கிறது. மாவட்டத்தின் செல்வம் மிகுந்த ஜமாத்துகளில் திருவிதாங்கோடு முக்கியமானது.
1300 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான இவர்களில் பலர் கேரளாவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள்.
இன்றுவரை இவர்களின் கொடுக்கல் வாங்கல்களும் திருமண பந்தங்களும் கேரளாவோடு அதிகமான அளவில் இருக்கின்றன.
திருவனந்தபுரத்தின் மிக முக்கியமான சாலை பாஜாரில் இவர்களின் ஆதிக்கமே இன்றும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிதாங்கோடு ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல்கள் கேரளாவிலும் இருக்கின்றன.
திருவிதாங்கோட்டில் மட்டும் இந்த ஜமாத்துக்கு சொந்தமான நான்கு தொழுகைப் பள்ளிகள் இருக்கின்றன. அவை …
மாலிக் முஹம்மது வலியுல்லாஹ் ஜும்மா மஸ்ஜித்
புஹாரி மஸ்ஜித்
முஹ்யித்தீன் பள்ளி
ஜீலானி மஸ்ஜித் .

மாலிக் முஹம்மது அவர்கள் கட்டிய கல்லுப் பள்ளியின் முன்னாள் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதே போன்ற குளங்கள் தேங்காப்பட்டினம் , அஞ்சுவன்னம் ஜமாஅத் போன்ற இடங்களிலும் இருக்கின்றன.
இந்த பள்ளியின் அமைப்பு கோட்டாரில் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் இடித்து மாற்றப்பட்ட பழைய குத்பாப் பள்ளியின் தோற்றத்தை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்துவிட்டது.
கோட்டாறு பள்ளியும் திருவிதாங்கோடு பள்ளியும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன.
அந்தப் பள்ளியின் அழகை வெகுநேரம் ரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி ஒரு பள்ளியைக் கட்ட எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள் ?
ஒரு பள்ளி மட்டுமா ?
மாலிக் முஹம்மது குழுவினர் நாற்பது பள்ளிகள் கட்டியிருக்கிறார்கள்.
எல்லாமே ஒரே மாதிரி இருக்கின்றன.
அத்தனைப் பள்ளிகளையும் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும் ?
எத்தனை ஆட்கள் தேவைப் பட்டிருப்பார்கள் ?
எவ்வளவு செல்வம் செலவாகி இருக்கும் ?
என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம் அறிவுக்குப் புலப்படாத பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதனால்தான் …
மாலிக் முஹம்மது வலியுல்லாஹ் போன்றவர்களை மக்கள் அவுலியாக்கள் , இறைநேசச் செல்வர்கள் என்று அழைக்கிறார்கள்.

கல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் இந்த ஊரில் ஏராளமான பட்டதாரிகள் இருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள்
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்
மருத்துவர்கள் என பலதரப்பட்ட திறமையாளர்கள் இங்கே உண்டு.
எம். அஹமதுகன் சாஹிபு
எம். உமர்கன்
ஆர்.எம்.ஹாஜி முகம்மதலி
மைதீன் மலுக்கு முஹம்மது என்ற இங்க்லீஷ்மேன்
எஸ்.ஏ. இப்ராஹீம்
போன்ற ஏராளமானவர்கள் இந்த ஊருக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்த பெரியவர்கள் .

திருவிதாங்கோட்டில் மதரசா அல் ஜாமிவுல் அன்வர் என்ற அரபி மதரசா இருக்கிறது. இது தவிர நான்கு அரபி பாடசாலைகளும் இருக்கின்றன.
முஸ்லிம் கலைக் கல்லூரி ஒன்று இங்கே இருக்கிறது.
ஜலால் ஆஸ்பத்திரி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த எஸ்.ஏ. இப்ராஹீம் சாஹிப் அந்த இடத்தை கல்லூரி நடத்த கொடுத்தவர் ஆவார்.

சிறப்பு வாய்ந்த இந்த ஊரின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி சாகுல் ஹமீது
செயலாளர் ஹாஜி முஹம்மது ஹனிபா
பொருளாளர் பஷீர்
46 ஆண்டுகளாக மாலிக் முஹம்மது ஜும்மா மசூதியில் இமாமாக இருக்கும் பேற்றினைப் பெற்ற பெருந்தகை மொவ்லவி ஷாகுல் ஹமீது ஆலிம் அன்வரி அவர்கள்.

இன்று நாங்கள் நோன்பு திறந்த முஹ்யித்தீன் பள்ளியின் இமாமாக இருப்பவர் மொவ்லவி சுல்பிகார் அலி. இவர் கோட்டாறு செய்யதினா இப்ராஹீம் அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.
இன்றைய தொழுகையில் அழகான முறையில் இனிமையாக கிராத் ஓதினார்.
எங்களையும் சிறப்பாக உபசரித்தார்.

இன்று பரோட்டா வெஜிடபிள் குருமா கஞ்சி என்று இங்கே அமர்க்களம் செய்தார்கள் இளைஞர்கள். நோன்பு அத்தனை நாளும் இங்கேயுள்ள இளைஞர் பட்டாளம் தினமும் நோன்பாளிகளுக்கு பசியாரக் கொடுத்து அசத்துகிறார்கள்.

மாலிக் முஹம்மது அவர்கள் இங்கே பள்ளியைக் கட்டி மக்களுக்கு இஸ்லாத்தை போதித்து அவர்களோடு அன்னியோன்யமாக இருந்து நற்பணியாற்றினார்கள்.
தங்கள் கராமாத்துகளால் மக்களுக்கு உதவிகள் பல புரிந்தார்கள். இவர்களை மிகவும் நேசித்த மக்கள் இவர்களின் பெயர்களையே தங்கள் பிள்ளைகளுக்கும் வைத்தார்கள்.
மலுக்கு என்றும் மாலிக் என்றும் மலுக்கு முஹம்மது என்றும் பெயர் சூட்டினார்கள்.
இன்றைக்கும் திருவிதாங்கோட்டில் அதிகமான மலுக்கு முஹம்மதுகள் இருக்கிறார்கள்.

பள்ளிவாசலை கட்டிய மாலிக் முஹம்மது அவர்கள் அக்கம் பக்கமெல்லாம் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தார்கள். இஸ்லாம் இங்கே வளர்ந்தது.
இங்கேயே வாழ்ந்து மறைந்த மகான் அவர்களின் நினைவாக ரபியுல் ஆகிர் மாதம் விழா நடைபெறுகிறது. அத்துடன் …
ரபியுல் அவ்வல் மாதம் மீலாது நபி விழாவும்
முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
ஷாகுல் ஹமீது நாயகம் ஆகியோரின் விழாக்களும் இங்கே அந்தந்த மாதங்களில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

கல்வியாளர்கள் பலர் இங்கே இருப்பதால் பல பள்ளிக்கூடங்களும் இங்கே இருக்கின்றன.
அரசியலிலும் பலர் செல்வாக்கோடு திகழ்கிறார்கள்.
ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தின் போது விஷமிகள் சிலர் இந்த ஊர் மக்களை சீண்டிப் பார்ப்பதுண்டு. ஆனாலும் மக்கள் பொறுமையோடும நிதானத்தோடும் சமய நல்லிணக்கம் பேணி ஒற்றுமையை கடைப்பிடித்து வாழ்கிறார்கள்.
மாவட்டத்தின் முக்கிய ஜமாத்துகளில் ஒன்றாகத் திகழும் திருவிதாங்கோடு மேலும் பல சிறப்புகழ்ப் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.

@ படங்களின் விளக்கங்களைப் போட நேரமில்லை.
நாளை போடுகிறேன்.
ஒருமுறை டைப் அடித்து அது சேமிக்கப்படாமல் அழிந்து போய் விட்டதால் மறுபடியும் டைப்.
முதலில் டைப் செய்தது இன்னும் சற்று கூடுதலாக இருந்தது.

 

-கவிஞர் அபூஹஷிமா, முகநூலில் பதிந்ததிலிருந்து…thiruvithaangodu mosque

Close