1 ரூபாய் அச்சடிக்க அரசுக்கு ரூ.1.14 செலவு: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்

புதியதாக ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க
அரசுக்கு 1 ரூபாய் 14 காசுகள் செலவாகும் என
தகவல் உரிமை சட்டத்தின் கீழ்
தெரியவந்துள்ளது.
ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது கடந்த 1994-
ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதன்
மதிப்பை விட அச்சடிக்கும் செலவு அதிகம்
என்பதே இதற்கு காரணம். 1 ரூபாய்
நோட்டுகளுக்கு பதிலாக நாணயங்களை
அதிகமாக வெளியிட மத்திய அரசு முடிவு
செய்தது.
இந்நிலையில் சுமார் இருபது வருடங்களுக்கு
பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுகள் அச்சிட
மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான
அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி
வெளியானது. அதில் 2015, மார்ச் 6-ம் தேதி
முதல் புதிய ஒரு ரூபாய் நோட்டு
வெளியிடப்படும் எனவும்
கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசின் `செக்யூரிட்டி பிரிண்ட்டிங்
அண்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா’ என்ற நிறுவனத்தால்
அச்சடிக்கப்படும் இந்த ஒரு ரூபாய்
நோட்டுக்கான செலவு ஒரு ரூபாய் 14 காசுகள்
என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர்
சுபாஷ் சந்திரா அகர்வால் இது தொடர்பாக
கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய
அரசு அளித்துள்ள பதிலில், இன்னும்
தணிக்கை செய்யப்படாத தோராய செலவு
ரூ.1.14 எனவும் அச்சடிக்க ஆகும் செலவு
இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும்
கூறப்பட்டுள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் சுபாஷ்
சந்திரா கூறும்போது, “அதன் மதிப்பை விட
14 காசுகள் அதிகமாக செலவிட்டு
அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு இதுவரை
ரிசர்வ் வங்கி அலுவலர்கள் கண்களிலும்
பட்டதாகத் தெரியவில்லை. மிகவும் குறைந்த
எண்ணிக்கையிலான ஒரு ரூபாய் நோட்டுக்
கட்டுகள் மத்திய நிதி அமைச்சகத்தின்
வேண்டுகோளுக்கு இணங்க அச்சடித்து
அனுப்பப்பட்டதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள்
கூறுகின்றன. வழக்கமாக இடம்பெறும் ரிசர்வ்
வங்கி கவர்னரின் கையொப்பம் இன்றி,
பின்னோக்கி செல்லும் வகையில் மத்திய
நிதியமைச்சக செயலாளரின் கையொப்பம்
இடப்பட்டதன் மீது விசாரணை நடத்தப்பட
வேண்டும்” என்றார்.
மூலப்பொருட்கள் இறக்குமதி
நம் நாட்டின் சில ரூபாய் நோட்டுகள் அதன்
மதிப்பை விட அதிக செலவில் தயாராவதற்கு
பல காரணங்கள் கூறப்படுகிறது. இவற்றுக்கான
தாள், மை ஆகியவை பிரிட்டன், ஜெர்மனி,
ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அதன்
மதிப்பில் சுமார் 40 சதவீத செலவு
இறக்குமதிக்கே சென்றுவிடுகிறது.
இதில் போலி ரூபாய் நோட்டுகள்
வெளியாகும் வாய்ப்புகளும் அதிகம்
உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்
சுமார் 2000 கோடி கரன்சி நோட்டுகள்
தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு
ரூ. 1280 கோடிக்கான மூலப்பொருட்கள்
இறக்குமதி செய்யப்படுகிறது.
அச்சடிக்கும் செலவு குறையுமா?
தாள், மை ஆகியவை இந்தியாவிலேயே
தயாரிக்கப்பட்டால், ரூபாய் நோட்டுகளுக்கான
செலவு குறைவதுடன் போலி நோட்டுகளின்
புழக்கத்தையும் தடுக்க முடியும் எனக்
கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில்
ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளதால், விரைவில்
இந்தியாவின் மூலப்பொருட்களுடன் ரூபாய்
நோட்டுகள் தயாராகும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு அதன்
அச்சடிக்கும் செலவும் குறையும் என
கருதப்படுகிறது.
மகாராஷ்டிரத்தின் நாசிக், ம.பி.யின் தேவாஸ்,
கர்நாடகத்தின் மைசூர், மேற்கு வங்கத்தின்
சல்போனி ஆகிய 4 இடங்களில் தற்போது
ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது.
அச்சடித்த நோட்டுகள் நாடு முழுவதும் சுமார்
12 இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி
அலுவலகங்கள் மூலமாக
விநியோகிக்கப்படுகின்றன.

image

Close