கருகும் காதல் – பிப்ரவரி 14

பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பழகி
பாசத்தைப் பகிர்ந்து
பிழைத்தது பலநாட்கள்

தாத்தனும் பாட்டியும்
தமிழினில் திளைத்து
தூய்மையாய் இல்லறம்
சுகித்ததும் பலநாட்கள்

பிந்தைய நாட்களில்
எந்தையும் தாயும்
சந்ததி பெற்றுச்
சிறந்ததும் பலநாட்கள்

என்னிலே இவளும்
இவளிலே நானும்
இருந்து மகிழ்ந்திடும்
இல்வாழ்வு பலநாட்கள்

ஒவ்வொரு நாளிலும்
சொல்லிலும் செயலிலும்
அன்பினைச் சொன்னோம்
அழகுற பகிர்ந்தோம்

எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே

மேநாட்டு மனிதருக்கோ
அன்பினைச் சொல்ல 
அவகாசம் இல்லை
பண்போடு பழக
படிப்பினை இல்லை

ஒற்றை நாளெடுத்து
அன்பு சொல் என்றனர்
காத்திருந்த கயமையின்
கட்டவிழ் என்றனர்

பண்பாடு கலாச்சாரம்
புண்பட்டு புறையோடி
நாற்றமெடுக்கு முன்
நல் வழி காண்பீர்

நாகரீகப் போர்வையில்
நயவஞ்சகக் கூட்டம்
நங்கையரை நசுக்கி
நல்லொழுக்கம் புதைத்து

நஞ்சினை விதைக்கும்
நாளிதைப் புறக்கனிப்போம்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி :அதிரை நிருபர்

Advertisement

Close