ஆ!! ஆபத்து!! டீ கடை தேத்தண்ணி!

image

சென்னை நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் விற்பனையாகும் தேநீரில் உயிருக்கு உலை வைக்கும் ரசாயனக் கலப்படம் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
நாம் அருந்தும் தேநீர் உண்மையான தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்டதா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். சென்னை தேநீர் கடைகளில் வழங்கப்படும் தேநீர் கலப்படத் தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பார்பிராஜின் என்ற ரசாயனம் கலந்த தேயிலையைப் பயன்படுத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதனால் தேநீர் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாம் பருகும் தேநீரில் உள்ள தேயிலையைத் தயாரிக்க கலப்படக்காரர்கள் 3 விதமான முறைகளைக் கையாளுகின்றனர்.
1) அரிசி உமியைப் பொடியாக அரைத்து நன்றாக வறுத்தெடுப்பர். பின்னர் சாயப்பொடி (பார்பிராஜின்) எனப்படும் ரசாயனப் பொருளை கலப்பர்.
2) உபயோகப்படுத்திய தேநீர் தூளை நன்கு உலர்த்திவிட்டு, அதில் பெரிய நிறுவனத்தின் தேயிலையை சிறிதளவு கலந்து, பார்பிராஜின் என்ற ரசாயனப் பொருளைக் கலந்து விற்பனை செய்வர்.
3) புளியங்கொட்டையை அரைத்து பொடியாக்கி அதில் பார்பிராஜின் ரசாயனப் பொருளை கலந்து விடுவார்கள்.
இதைத் தான் வித, விதமான பெயர்களில் அட்டை பெட்டிகளில் நிரப்பிக் கொண்டு நேரடியாக தேநீர் கடைகளில் விற்பனை செய்வர். சென்னை அயனாவரம், செங்குன்றம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கலப்படத் தேயிலை தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தேயிலையைக் கொண்டுதான் தேநீர் கடைக்காரர்கள் செம ஸ்ட்ராங்கான டீ தயாரிக்கின்றனர். இவை சிவப்பு நிறத்தில் காணப்படும்.
இதைத் தொடர்ந்து பருகுபவர்கள் நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பை கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
உணவுப் பொருள் கலப்படத் தடுப்புத் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. கடுமையான சட்டமெல்லாம் இருக்கிறது. ஆனால் இந்தத் துறையில் போதுமான அளவுக்கு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகன வசதியும் இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் தேநீர்க் கடைகளும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான சாலையோர உணவுக் கடைகளும், 500-க்கும் அதிகமான குடிநீர் தொழிற்சாலைகளும், பெரிய உணவகங்களும் உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, கலப்படம் செய்யப்பட்ட பொருளை பறிமுதல் செய்ய ஒட்டுமொத்த மாவட்டத்துக்கே கலப்படத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 14 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு உதவியாளர்களோ, வாகன வசதியோ இல்லை. அப்படி கலப்படப் பொருளை பறிமுதல் செய்தால் கூட அதை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் முடிவு 4 மாதம் கழித்து கிடைக்கும்.
இதனால் உணவுக் கலப்படக்காரர்கள் எவ்வித பயமின்றி தங்கள் தொழிலை சுதந்திரமாகச் செய்து வருகின்றனர்.
தரமான தேயிலைத் தூள் கிலோ ரூ.460 முதல் ரூ.600 வரை விற்கப்படும்போது, தேநீர் கடைகளில் நேரடியாகவே கலப்படத் தேயிலைத் தூள் கிலோ ரூ.250-க்கு விற்கப்படுகிறது. இந்த கலப்பட தேயிலைத்தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் ரசாயனம் கலந்த சாயப்பொடி என்பதால் ஏராளமான தேநீர் தயாரிக்க முடிகிறது. இதனால் கடைக்காரர்கள் லாபநோக்கத்துடன் கலப்படத் தேயிலையை மட்டுமே வாங்கி கொள்ளை லாபம் பெறுகின்றனர். அரசு உடனடியாக உணவுப் பொருள் தடுப்புப் பிரிவை விரிவுபடுத்த வேண்டும்.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியது:
இந்தத் துறையில் மிக முக்கியமானது ஆள் பற்றாக்குறை, வாகன வசதி இல்லை. ஒரு கடையில் கலப்படப் பொருளை பறிமுதல் செய்யவேண்டும் என்றால் தன்னந்தனியாகச் சென்று ஈடுபட வேண்டும். அப்படி பறிமுதல் செய்யும் பொருளை தஞ்சாவூர் சோதனை கூடத்துக்கு அனுப்பி, பதில் பெறவேண்டும். கலப்படம் செய்யப்பட்டது உறுதியானவுடன் வழக்குப் பதிவு செய்ய உயரதிகாரிகளின் அனுமதி பெறவேண்டும். வழக்கின் ஒவ்வொரு வாய்தாவுக்கும் நானே சென்று வரவேண்டும். இதனால் நமக்கேன் வம்பு என்று கலப்படம் என்று தெரிந்தவுடன் அதனை பறிமுதல் செய்து அழித்துவிடுவோம் என்றார்.

Close