Adirai pirai
posts

முஸ்லிம் உலகில் நடப்பிலிருக்கும் பிரிவினைவாத போக்குகள் மற்றும் வன்முறைகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை விடுக்கிறது!

புது தில்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டம், அனைத்து இந்திய முஸ்லிம்களும், முஸ்லிம் உலகில் நடந்தேறிவரும் பிரிவினைவாத போக்குகள் மற்றும் வன்முறைகள் குறித்து, மெய்யான புரிதலும், நடைமுறைக்கேற்ற அணுகுமுறையையும் மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறது.

புனித மிக்க இந்த ரமலான் மாதம், அனைத்து முஸ்லிம்களும் தம்மிடையேயுள்ள சிந்தனை, அணுகுமுறை ரீதியான வித்தியாசங்களைக் களைந்து, பிளவுகளை நீக்கி, ஒன்றுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இவ்வருட ரமலானில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகள் அதிகமாவதையும், இணக்கம் சிதைவுறுவதையும், சமீப காலமாக சில அரபு-முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் குண்டுவெடிப்புகளும், மனித உயிர்கள் படுகொலைகளும் மெய்பிக்கின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு நைஜீரியாவிலுள்ள ஒரு பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் ப‌ல முஸ்லிம் உயிர்கள் கொல்லப்பட்டன. நைஜீரியாவின் கிளர்ச்சி போராளிக்குழுவான போகோ ஹராம் இந்த கொலைக் குற்றங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதேபோன்று குவைத்திலும், சவூதி அரேபியாவிலும் ஷீஆ பள்ளிவாசல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பல அப்பாவி உயிர்கள் பலியாகின. இதற்கு ஈராக்கிலும், சிரியாவின் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்லாமிய அரசு (ISIS) என்றறியப்படுகின்ற தீவிரவாத அமைப்பு காரணமாக கூறப்படுகிறது. துனீசியாவிலும் இது போன்றதொரு தீவிரவாத செயல் சமீபகாலத்தில் நடந்ததாக அறியப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டம், மேற்சொன்ன அனைத்து விதமான தீவிரவாத செயல்களையும், இதைப்போன்ற மனிதநேயமற்ற செயல்களால் முஸ்லிம்களின் கண்ணியத்தையும், இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தும், அவற்றை புரியும் குழுக்களின் கொடிய, கீழ்த்தரமான எண்ணங்களை வன்மையாக கண்டிக்கின்றது. இத்தகைய தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள், பல நாடுகளில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் சமூகங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், உலக முஸ்லிம்களிடையே பிள‌வுகளை ஊக்குவிப்பதாகவும், பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் உள்ளது.

இவ்வாறு முஸ்லிம்களது நிலங்களில் நடைபெறும் அனைத்து கொந்தளிப்புகளின் பின்னணியில் இஸ்ரேலிய ஸியோனிசவாதிகளும், ஏகாதியபத்தியவாதிகளும், மேற்கத்திய பெருமுதலாளி வர்க்கமும் அவர்களது கார்ப்பரேசன்களின் சதிகளும் இருப்பது ஐய்ய‌மற்ற உண்மை. ஆனால் இத்தகைய கைசேதமான நிலைமைக்கு முஸ்லிம்களது நிலங்களிலுள்ள ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தாங்கள் நியாயவாதிகளாகவும், தங்கள் மக்களின் நல விரும்பிகளாக‌ இருந்திருப்பின் அந்நிய எதிரிகளின் இந்த சதிகளுக்கு ஆளாகியிருக்கமாட்டார்கள். இவர்கள் ஏற்கனவே குழுவாத போர்களினால் சீரழியும் தங்கள் மக்களையே அடக்குமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களை கொன்றொழித்துக்கொண்டிருக்கின்றனர். சிரியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்கள், மக்களின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வழி கோலாமல், உட்பூசல்களுக்கும், ஆயுதமேந்திய மோதல்களுக்கும் தங்களது நாடுகளை பிறப்பிடமாக்கி விட்டிருக்கின்றனர். கவலைக்கிடமான விஷயம் என்னவெனில் சாமானிய மக்களின் சுதந்திரமோ, அவர்களது உரிமைகளோ இத்தகைய அடக்குமுறை ஆட்சியாளர்களாளும், இவ்வாறான அடக்குமுறையை ஒழிப்பதாக கூறும் எதிரணியினராளும் சிறிதும் மதிக்கப்படுவதில்லை. இந்நாடுகளில் போராடும் புரட்சி படையினரும்(?) கூட மக்களின் பாதுகாப்பான வாழ்க்கையென்ற உரிமையையும் மறுத்து இறுதியில் நாட்டை விட்டு வெளியேறுவதும், அகதியாக வாழ்வதுமே விதி என்ற நிலைக்கு தங்கள் மக்களை தள்ளி விடுகின்றனர்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டம், முஸ்லிம்கள் மத்தியில் சன்னி-ஷீஆ பிரிவினையோ அல்லது சூஃபி-ஸ‌லஃபி பிரச்சினைகளோ, முஸ்லிம் சமூகத்தை சிதைவையே வெளிப்படுத்துகிறது என்பதை முஸ்லிம்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சந்திப்பு, நமது இந்திய முஸ்லிம் சமூகமானது, மேற்சொன்ன நிகழ்வுகளினால் அலைகழிக்கப்பட்டுவிடாமல், நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக தளத்தை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது முழுமுயற்சியையும், நமது சமூகத்தையும், ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும், தேசத்தை வலிமைப்படுத்தும் காரியங்களிலே ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

மு. முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.