முத்துப்பேட்டையில் குழந்தைகள் கைது!

TamilNews_7971307635308ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் சாலைமறியல் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 10 நாள் கெடு விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை வாங்க மறுத்த பலரின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த குடியிருப்புவாசிகள் தங்களது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு எஸ்டிபிஐ கட்சியினரும் ஆதரவு அளித்து மறியலில் கலந்து கொண்டனர். இதனால் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு அவர்கள் ஒத்துழைக்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து குழந்தைகள் உட்பட மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அப்போது டி.எஸ்.பி.அருண், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், நகரத் துணைத் தலைவர் காதர் முகைதீன் ஆகியோரையும் வேனில் ஏறும்படி கூறினார். இதனால் டி.எஸ்.பிக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏராளமான போலீசார் வந்து 60க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு மாலையில் விடுவித்தனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பை நிலவியது.

-dinakaran

Close