Adirai pirai
posts

சவூதியில் உள்ள இந்த அருமையான திட்டத்தை நாமும் செய்தால் என்ன?

நான் பணிபுரியும் இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் அருகில் உள்ள இடத்தைத்தான் நாம் பார்கிறோம். பள்ளிவாசலை ஒட்டியே உள்ள இடத்தில் இரும்பு பெட்டிகள் இரண்டை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? சவுதியின் பெரும்பாலான பள்ளிகளில் இது போன்ற பெரிய இரும்பு பெட்டிகளை பார்த்திருப்பீர்கள். இது எதற்காக?

ஒரு பெட்டி பழைய துணிகளை சேகரிக்கும் பெட்டி. மற்றொரு பெட்டி பழைய நோட்டு புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்களை சேகரிக்கும் பெட்டி. நாம் உபயோகித்து பத்தாமல் போகும் துணிமணிகள் மற்றும் உபயோகித்து முடித்த பாட புத்தகங்களை இந்த பெட்டியில் சவுதிகள் போடுவதை தினமும் பார்கிறேன். நானும் பலமுறை இந்த பெட்டியில் எனது பழைய துணிகளை போட்டுள்ளேன். வெளி நாட்டு பணியாளர்கள் பலரும் இந்த பெட்டியில் தங்களின் பொருட்களை போடுவதை சர்வ சாதாரணமாக பார்கலாம்.

வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ ஒரு கம்பெனியின் ஆட்கள் வந்து இந்த பெட்டியை திறந்து பொருட்களை எடுத்துச் செல்வர். இவர்கள் இதனை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்று ஒரு முறை நேரிலேயே அந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டேன். சிறிய மலை போல் பொருட்கள் பிரிக்கப்பட்டு அவை பேக்கிங் செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த துணிகளெல்லாம் துவைக்கப்பட்டு அழகிய முறையில் பிளாஸ்டிக்கினால் சுற்றப்பட்டு தேவையுடையோரை தேடிச் சென்று இலவசமாக வழங்குகின்றனர். ஏழ்மையில் உள்ள கிராமங்கள் நிறைய இங்கு உள்ளது. அவர்களை தேடிச் சென்று இந்த பொருட்களை விநியோகிக்கின்றனர். பள்ளிகளை தொடர்பு கொண்டு புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை இலவசமாக அனுப்பி வைக்கின்றனர்.

இது போன்ற அமைப்புகளை நமது ஊர்களில் ஏன் செயல்படுத்தக் கூடாது? குழந்தைகள் வளரும் போது நம்மிடம் வருடா வருடம் பழைய துணிகள் சேர்ந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாட்களில் புது துணி எடுத்தால் பழைய தூணிகள் அலமாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கும். 

எத்தனையோ வறிய குடும்பங்கள் வறுமையை வெளியில் சொல்லாமல் கவுரவமாக வாழ்ந்து வருவர். அது போன்ற மக்களை நாம் தேடிச் சென்று உதவ முன் வர வேண்டும். இது போன்ற செயல்களை இளைஞர் அமைப்புகள் செயல்படுத்தினால் அதனால் பலர் பலன் பெறுவர்.

சென்ற ஆண்டு இது போல் யாருக்காவது உதவலாம் என்று எனது மனைவியிடம் “உன்னிடம் உள்ள பழைய துணிகள் எல்லாவறையும் எடு” என்று கேட்டேன்.

‘ஏன் முதலிலேயே சொல்லவில்லை. என்னிடம் சேரும் எனது துணி பிள்ளைகள் துணி உங்கள் துணியை எல்லாம் வருடா வருடம் எவர்சில்வர் காரனிடம் கொடுத்து விட்டு டம்ளர், கோப்பைகள், கரண்டிகள் என்று வாங்கி விடுவேனே’ என்றார். 🙂

பல குடும்பங்களில் இதுதான் நடக்கிறது. இது போன்ற அமைப்புகள் கிராமங்கள் தோறும் இருந்தால் அவை எவர்சில்வர் பாத்திரங்களாக மாறாதல்லவா? சவுதி போன்ற செல்வந்த நாடுகளிலேயே இது போன்ற அமைப்புகள் இருக்கும் போது வறிய நாடான நமது நாட்டுக்கு இது போன்ற செயல்பாடுகள் அவசியத்திலும் அவசியம் அல்லவா? நாம் நேரிடையாக ஒருவருக்கு உதவி செய்தால் நாம் விரும்பா விட்டாலும் நம்மை பார்க்கும் போதெல்லாம் தேவையற்ற மரியாதைகளை செய்து கொண்டிருப்பார். இது போன்ற பொது ஸ்தாபனங்களுக்கு அளித்தால் அவரும் கௌரமான உதவியைப் பெற்றுக் கொள்வார். நமக்கும் நன்மை கிடைக்கும். இறைவனும் சந்தோஷப்படுவான்.

‘நம்பிக்கைக் கொண்டோரே! இறைவனையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள். இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறையாகும். அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றும் இல்லாமல் ஆகி விடுகிறது. தான் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். தன்னை மறுக்கும் கூட்டத்துக்கு இறைவன் நேர் வழி காட்ட மாட்டான்.
-குர்ஆன் 2:264

“ஆதமுடைய மகனே! நீ செலவிடு. உனக்கு நான் செலவிடுகிறேன்.(கொடுக்கிறேன்)” என்று இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவித்தார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா
நூல்: புகாரி- 5352

Thanks by சுவனப் பிரியன்

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy