அதிரையில் இன்று மட்டும் 12 சாலை விபத்துகள்! கவலையில் முடிந்த மகிழ்ச்சி!

url_1_0அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தனர். அதற்க்கு ஈடாக வேதனைகளும், அதிர்ச்சிகளும் இருக்கவே செய்தன. இளைஞர்களும் சிறுவர்களும் தங்கள் பைக்குகளில் 3, 4 நபர்களை ஏற்றிக்கொண்டு ரேசில் செல்வது போல் தெருக்களில் பறக்கின்றனர். இன்று நமது அதிரை பிறை க்கு சாலை விபத்துகள் குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இன்று மட்டும் ஏறக்குறைய 12 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் சிறிய, பெரிய சாலை விபத்துகள் அடங்கும். இருப்பினும் மகிழ்ச்சியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சி வேண்டாம் என பதியாமல் இருக்கலாம் என்று நினைத்தாலும் அடுத்தடுத்து வரும் விபத்து தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

எனவே இந்த பதிவை பதிகிறோம். இன்று 3 பள்ளி சிறுவர்கள் பெருநாள் குஷியில் அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளானார்கள். இதில் அவர்களுக்கு முகம், தலை, கால் போன்ற இடங்களில் பயங்கர காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பெருநாள் என்பது மகிழ்ச்சிக்காக அல்லாஹ் நமக்கு அளித்த அருட்கொடை. ஆனால் பெருநாள் கொண்டாடும் போது ஏனோ நமது இளைஞர்களுக்கு பெருமையும் துடிப்பும் வந்து விடுகின்றது. இந்த துடிப்பின் மூலம் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பல்வேறு வேதனைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

பெரும்பாலும் இன்று ஏற்பட்ட விபத்துகள் சிறுவர்களால் ஏற்பட்டவை. கால் எட்டாத நிலையில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியுடன் துவங்கிய இந்த பெருநாள் இந்த வாகன விபத்துக்களால் கவலையில் முடிந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பைக் வாங்கி தருகிறோம் என்று ஆபத்தை வாங்கி கொடுக்கின்றனர். இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.

 

இது குறித்த கட்டுரை:

இந்தியாவில் தற்போது சாலை விபத்துகள் அதிகாமாகிக் கொண்டே செல்கின்றன. நாட்டில் அதிகரிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் போக்குவரத்து துறையின்  முன்னேற்றத்தாலும் நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள் தோன்றியுள்ளன. மேலும் வாகனங்கள் குறைந்த விலைகளில் கிடைப்பதால் சாமானிய மக்களும் கூட உபயோகிக்கும் பொருளாக இரு சக்கர வாகனங்கள் மாறியுள்ளன. இது ஆரோக்கியமான தகவல் என்றாலும் இந்த வாகனங்களின் பெருக்கத்தால் நாள்தோறும் நம் நாட்டு மக்கள் எண்ணிலடங்கா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

அதிகரித்திருக்கும் வாகனங்களின் பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய காலங்கட்டங்களில் ஓட்டுனர் உரிமம் இன்றி பல சிறுவர்கள் அதி வேகமாக செல்கின்றனர். ஒரு கட்டத்தில் வாகனம் அதன் கட்டுப்பாட்டினை இழந்தால் அதனை சமாளிக்க முடியாமல் இச்சிறுவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி சின்னஞ்சிறு வயதிலேயே விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதற்க்கும் உறுப்புகளை இழப்பதற்க்குமா உங்கள் பெற்றோர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து வருகின்றனர். இது போல் தான் நாம் சரியாக சென்றாலும் மது அருந்திவிட்டோ அல்லது சாலை விதிமுறைகளை மீறியோ நம் மீது வந்து சிலர் நம்மையும் விபத்தில் ஈடுபடுத்தி விடுகின்றனர். இப்படித்தான் எந்த தவறும் செய்யாமல் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் உறுப்புகளை இழந்து நீங்கா துயரத்தில் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் சாலை விபத்து என்பது எங்கும் எதிலும் எதனாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது வாகனமான வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு எதாவது ஒரு வாகனத்தில் பயனிக்கிறார் என்றால் அவர் நூறு சதவீதம் அந்த பகுதிக்கு விபத்துகள் இன்றி செல்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. அன்மையில் நடந்த பரமகுடி பேருந்து விபத்தில் 19 வயதே ஆன் கல்லூரி தொழிகள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இவர்கள் இப்பேருந்தில் ஏறும்போது நாம் விபத்தில் இறந்து விடுவோம் என்று எண்ணி இருப்பார்களா? இருப்பினும் நாம் முடிந்த அளவிற்கு விபத்துக்களில் இருந்து தவுர்ந்து இருந்துக்கொள்ள வேண்டும்.

சில இளைஞர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் வாகன சாகசங்களை பார்த்து விட்டு அது போல் தானும் செய்வதும் அதி வேகமாக வண்டிகளை ஓட்டுவதிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சில இளைஞர்களிடம் வேகமாக ஓட்டுவதால் உனக்கு என்ன கிடைக்கிறது என்று கேட்டால் “அது ஒரு தனி சுகம்” என்பார்கள். இந்த சுகமும் வேகமும் என்றைக்கு சோகமாக மாறும் என யாருக்கும் தெரியாது. உலக வாழ்க்கை என்பது இறைவன் நமக்கும் வழங்கிய பொக்கிஷம். அதை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதை விட்டு விட்டு அற்ப சுகத்துக்காக வேகமாக வாகனங்களை ஓட்டி அந்த பொக்கிஷத்தை இழக்கலாமா? அன்றாடம் நம் வாழ்வில் நாம் எவ்வளவோ கோர  விபத்துக்களை நேரிலோ அல்லது ஊடகங்களின் வழியாக பார்த்திருப்போம். இருப்பினும் இவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளாமல் எந்த கவலையுமின்றி வேகமாகவே செல்கிறோம். அரசாங்கமும் எவ்வளவோ முறை தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுமாறு கூறிவிட்டது. அதையும் நாம் பின்பற்றுவதில்லை. தலை முடி கலைந்து விடும் என்பதற்க்காக சிலர் தலைக்கசவம் அணிவதில்லையாம். தலை முடி கலைந்தால் சரி செய்து விடலாம், ஆனால் நம் உயிர் பிரிந்தால்?

வேகமாக வாகனங்களை ஓட்டும் இளைஞர்களே! இதனை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எந்த கவலையும் இன்றி வேகமாக வாகனங்களை ஓட்டலாம். ஆனால் நம்மை மட்டுமே நம்பியிருக்கும் உங்கள் தாய் தந்தையர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நம் மீது அன்பும் கருணையும் காட்டும் உங்கள் உறவுகளை நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் தூசி விழுந்தால் கூட தாங்கிக்கொள்ளாத அவர்கள் நாம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாலோ உறுப்புகளை இழந்தாலோ தாங்கிக்கொள்வார்களா! நமக்கு ஏதாவது நேர்ந்தால் நமது குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என எண்ணிப் பாருங்கள்.

வேகம் குறைப்போம்! சோகம் தவிர்ப்போம்!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

 

 

Close