சென்னையில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு ம.ம.க பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் 
பொதுச்செயலாளர்  எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

125 ஆண்டுகள் பழமையான சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையோடு சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் நியாயமானது. அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை ஏற்க முடியாது. இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது.

ஒரு அரசு பொது மருத்துவமனையோடு ஒரு மருத்துவக் கல்லூரி இணைந்திருப்பது எவ்வளவு பொருத்தமானதோ அதேபோலத்தான் உயர்நீதிமன்றத்திற்கு அருகிலேயே சட்டக்கல்லூரி இயங்குவதும் பொருத்தமானது.நகரின் முக்கியப் பகுதியில் இருக்கும் இக்கல்லூரியில் விளிம்பு நிலை மக்கள் தான் அதிகமாகப் பயில்கிறார்கள்.

இக்கல்லூரி ஸ்ரீபெரும்புதூருக்குமாற்றப்படுமேயானால் இவர்கள் பெருமளவு சிரமத்திற்குள்ளாவார்கள். மேலும், உயர்நீதிமன்ற சட்ட நிபுணர்கள் பலர் சிறப்பு பேராசிரியர்களாகஇங்கு பணிபுரிகிறார்கள். 

இக்கல்லூரி இடமாறுமேயானால் அவர்களின் பங்களிப்பும் கேள்விக்குறியாகிவிடும்.மெட்ரோ ரயில் பணி காரணமாக இக்கட்டிடம் பாதிக்கப்பட்டிருக்கமேயானால், உரிய பொறியியல் நிபுணர்களைக் கொண்டு அதை சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இடத்தையே மாற்றவேண்டும் என்பது நியாயமற்றது.எனவே அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையைதமிழக அரசு ஏற்க வேண்டும். இதுகுறித்து ஜனநாயக வழியில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது.

மாணவர்கள் பொதுமக்களுக்குஇடையூறு இல்லாதவண்ணம் தங்கள் போராட்ட வியூகங்களை அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

எம். தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி  

Advertisement

Close