மதுரையில் பயங்கரம்! இஸ்லாமிய வாலிபர் கொலை!

11752531_388066708055448_511149506790212671_n  மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள கமீம்ஷா பள்ளிவாசல் 4–வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் முகமது யாசின் (வயது27). இவர் மீனாட்சி பஜாரில் செல்போன் விற்பனை செய்து வந்தார்.

நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய அவர் இரவு 11.30 மணி அளவில் கமீம்ஷா பள்ளிவாசல் பகுதியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது ஒரு ஆட்டோவிலும், மோட்டார் சைக்கிளிலும் 7–க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. முகமது யாசினை நோக்கி வெடிகுண்டை வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யாசின் மற்றும் அவரது நண்பர்கள் சிதறி ஓடினார்கள்.

இந்த நிலையில் முகமது யாசினை விரட்டி சென்று மர்ம கும்பல் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டி விட்டும் தப்பி ஓடி விட்டது.

உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது.

மேலும் இந்த கொலை குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட முகமது யாசினின் சித்தப்பா மன்னர் மைதீன். இவர் மீது பல வழக்குகள் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவரை ஒரு மர்ம கும்பல் வெட்டிக்கொன்றது. இப்போது முகமது யாசின் கொலை செய்யப்பட்டு இருப்பது அவரது குடும்பத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில் போட்டியால் முகமது யாசின் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை பல்வேறு பகுதியில் கொலை கும்பலை தேடி வருகிறார்கள்.

Close