வீடு தேடி வருகிறது ரயில் டிக்கெட்!

ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி இருக்காது. சிலரோ தங்களது கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயங்குவார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிய முறை ஒன்றை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி நாம், வழக்கம்போல ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட்டை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நம் வீட்டிற்கு நேரில் வருவார். அவரிடம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்திவிட்டு, டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த வசதியைப் பெற, பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை நேரில் வந்து தருவதற்காக, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக இந்த வசதி, 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி :விகடன் 

Advertisement

Close