50வது ஆண்டு கொண்டாட்டத்தில் சிங்கார சிங்கப்பூர்!

உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரியும் சிங்கப்பூர் நேற்று (09-08-2015) சுதந்திரத்தின் 50-வது பொன்விழாவை கொண்டாடுகிறது .சிங்கப்பூரே விழா கோலமாக இருக்கிறது . நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்களின் தொடர் கொண்டாட்டங்கள் வண்ணமயமாய் இருந்தது .

நவீன சிங்கப்பூரின் தந்தையான திரு . லீ குவான் இயூ , சேரியாக இருந்த ஒரு மீன்பிடித் தீவை உலகின் பொருளாதார தேசமாக உருவாக்கிக் காட்டினார் . நதியில்லை , குடிநீர் இல்லை , காடுகளைத் தவிர எந்த இயற்கை வளங்களும் இல்லை . பெரிய நிலப்பரப்பு இல்லை , தொழிற்சாலைகள் இல்லை .

இப்படி எத்தனையோ ‘இல்லை’ கள் .! ஆனாலும் லீ என்னும் ஒரு தனி மனிதனின் தொலைநோக்கும் , அயராத உழைப்பும் இன்று சிங்கப்பூரை உலகின் விரும்பி குடியேரும் முதன்மை தேசங்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது .

பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதால் இதமான பருவ காலத்தையும் , வாராந்திர மழைப்பொழிவையும் பெற்றிருக்கும் சிங்கப்பூரில் 94 சதவீத மக்கள் வீட்டுடைமையாளர்களாக இருக்கிறார்கள் . அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது .

விரைவாக செயல்படும் துறைமுகங்கள் ,பரபரப்பாக இயங்கும் விமான நிலையம் ,சிறப்பான பொது போக்குவரத்து வசதிகள் , மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அம்சங்கள் , தரமான உள்கட்டமைப்பு வசதிகள் , சுகாதார மேம்பாடு , பாதுகாப்பான சட்டம் – ஒழுங்கு , இன நல்லிணக்கம் , எங்கும் பசுமை , உலகின் வேறு எங்கும் இல்லாத வசதியான குடியிருப்பு கட்டிடங்கள் , எளிதில் புரிந்துக் கொள்ளும் வீதி அமைப்புகள் , எளிதில் வணிகம் தொடங்கும் வசதிகள் , திட்டமிட்டு உழைத்தால் செல்வம் குவிக்கும் வாய்ப்புகள் ,ஊழலற்ற நிர்வாகம் இவையாவும் இன்றுசிங்கப்பூரை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியிருக்கிறது .

பொறுப்புணர்வுமிக்க குடிமக்களை உருவாக்கி , அவர்களை நாகரீக சூழலில் இன நல்லிணக்கமிக்கவர்களாக மற்றி , எல்லோரையும் உழைப்பாளர்களாக உருவாக்கி சிங்கப்பூரை ஆசியாவின் ‘ சுவிட்சர்லாந்தாக ’ மாற்றிய திரு .லீ குவான் இயூ , இந்த பொன்விழாவில் இல்லாது , பொன்விழா ஆண்டிலேயே உயிரிழந்தது , சிங்கப்பூரர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் தான் . எனினும் அந்த சோகத்தையும் மறந்து , தங்கள் 50 ஆண்டுகால சாதனையை உலகமே வியக்கும் வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

image

Close