வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார் சவூதி மன்னர் சல்மான்

image

உலகின் செல்வச் செழுமை மிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சவுதி அரேபியாவின் மன்னரான சல்மான் வரும் நான்காம் தேதி வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சவுதி நாட்டின் பட்டத்து மன்னராக பதவியேற்று கொண்ட சல்மான், அரபு நாட்டு தலைவர்களை சந்திக்க கடந்த மே மாதம் ஒபாமா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பகைநாடான ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தி கொண்ட அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பை மன்னர் சல்மான் தவிர்த்துவிட்டதாக முன்னர் கூறப்பட்டது.

இந்நிலையில், மன்னராக பதவியேற்ற பின்னர் முதன்முதலாக அமெரிக்காவுக்குச் செல்லும் சல்மான், வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அதிபர் பராக் ஒபாமாவை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது சிரியா, ஏமனில் நிலவிவரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஏமனில் அரசுகளுக்கு எதிராக போரிட்டுவரும் தீவிரவாதிகளை ஒடுக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் சவுதி நாட்டு விமானப் படைகளும் இடம்பெற்றுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

Close