சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மாவுக்கு விடுதலை வழங்கிய நீதுபதி குமாரசாமி மீது சொத்துக் குவிப்பு புகார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி மீது சட்ட விதிமுறைகள் மீறி வீட்டுமனை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த சொத்து குவிப்பு வழக்கை விசாரணை நடத்தி அவர்கள் மீதான புகார் உண்மையில்லை என்று சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்து கடந்த மே 17ம் தேதி தீர்ப்பு வழங்கியவர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி. இவர் கடந்த 24ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதே நாளில் அவர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் சட்ட விதிமுறைகள் மீது பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் கர்நாடக வீட்டு வசதி கழகத்தில் வீட்டுமனை பெற்றதாக வக்கீலும், கர்நாடக ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவருமான ஏ.ஆர்.எஸ்.குமார் தலைமையில் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், பெங்களூரு பெருநகர் மாநகர வளர்ச்சி குழுமம் மற்றும் கர்நாடக வீட்டு வசதி கழகம் ஆகியவற்றில் வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் ெகாடுப்பவர்களுக்கு பெங்களூருவில் சொந்தமாக நிலம், வீடு அல்லது காலி மனை இருக்கக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் நீதிபதி குமாரசாமிக்கு சொந்தமாக வீடு இருந்தும், அந்த தகவலை மறைத்துவிட்டு பெங்களூரு, மைசூரு மாநகரங்களில் வீட்டுமனை பெற்றுள்ளார்.

இவர் தனது நீதிபதி பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.  கோலார் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கடந்த 1997ம் ஆண்டு கர்நாடக வீட்டு வசதி கழகத்தின் மூலம் பெங்களூரு அடுத்த கெங்கேரி, 3வது ஸ்டேஜில் கட்டியுள்ள குடியிருப்பில் பிளாட் வாங்கியுள்ளார்.அதை தொடர்ந்து பல்லாரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கெங்கேரியில் வாங்கிய பிளாட்டை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக மைசூரு மாவட்டம் ெஹாட்டேகல்லி கிராமத்தில் கர்நாடக வீட்டு வசதி கழகத்தின் சார்பில் கட்டியுள்ள குடியிருப்பில் கடந்த 2001ல் வீடு பெற்றுள்ளார். கர்நாடக காதி வாரியத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் நீதிபதி குமாரசாமியின் மனைவி எம்.என்.நாகரத்னம்மா கடந்த 1987ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யும்படி பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பித்தார்.

அதை பரிசீலனை செய்த பி.டி.ஏ. அதிகாரிகள் கடந்த 2005ம் ஆண்டு வீட்டுமனை ஒதுக்கீடு செய்தனர். பிடிஏவுக்கு கொடுத்த விண்ணப்பத்தில் தனது கணவர் பெயரில் வீடு இருப்பதையும், அவர் கர்நாடக வீட்டு வசதி கழகம் மூலம் வீடுகள் பெற்றுள்ள தகவல் மறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கர்நாடக மாநில நீதித்துறை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சிவநகரில் அமைந்துள்ள நீதித்துறை குடியிருப்பு (Judicial layout)ல் 4 ஆயிரம் சதுர அடி வீட்டுமனை பெற்றுள்ளார். இப்படி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிபதி குமாரசாமி, பெங்களூரு பெருநகர் மாநகர வளர்ச்சி குழுமம் மற்றும் கர்நாடக வீட்டு வசதி கழகம் மற்றும் கர்நாடக நீதித்துறை ஊழியர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் அதன் சட்ட விதிமுறைகள் மீறி வீட்டுமனை பெற்றுள்ளார். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ள சொத்து பட்டியலில் பெங்களூரு, குமாரகிருபா மேற்கு, வெங்கடசாமிராஜு சாலையில் பேலஸ் குட்டஹள்ளியில் உள்ள திவ்யாமேனர் அப்பார்ட்மெண்ட்டில் ரூ.29 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்புள்ள வீடு இருப்பதாக மட்டுமே காட்டியுள்ளார். நீதித்துறையில் மதிக்கத்தக்க நீதிபதி பொறுப்பில் இருந்தவர், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது சரியல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

-தினகரன்

Close