ஹோட்டல்களில் இட்லி, தோசை விலை உயர்கிறது

image

ஹோட்டல்களில் இட்லி, தோசை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெரிய வெங்காயம், இட்லி அரிசி ஆகியவற்றின் விலை உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சிறிய, நடுத்தர ஹோட்டல்களில், இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் ரகங்களின் விலையை, செப்.,1 முதல் உயர்த்த உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஹோட்டல்களில் உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உளுந்தம் பருப்பின் விலை, கடந்த மாதத்தை விட, ஆகஸ்ட் மாதத்தில் கிலோவுக்கு, 25 ரூபாயும், துவரம் பருப்பு விலை, கிலோவுக்கு 50 ரூபாயும், பெரிய வெங்காயம் விலை, கிலோவுக்கு 40 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இட்லி ரக அரிசி விலை, கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல், மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இட்லி, தோசை, சாம்பார் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பருப்பு ரகங்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இட்லி, தோசை ஆகியவற்றின் விலை, செப்.,1 முதல் உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போதைய விலையிலிருந்து, 5 முதல், 10 சதவீதம் உயத்த உள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பருப்பு வகைகள், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடைகளுக்கான வாடகை, தொழிலாளர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல் கட்டமாக, இட்லி, தோசை ஆகியவற்றின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயர்வு செப்.,1 முதல் அமலுக்கு வருகிறது. அதன் பின்னரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் பட்சத்தில், சாப்பாடு, பிரியாணி ரகங்களின் விலையும் உயர்த்தப்படும். தற்போது இந்த விலை உயர்வு சைவ, அசைவ ஹோட்டல்கள், பிளாட்பார கடைகளிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Close