LADIES CARE: கண்ணாடி கல் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் பெண்களுக்கான எச்சரிக்கை பதிவு

image

சில வாரங்கள் முன்பு காலை ஒரு 6, 6.30 மணிக்கு பெரும் சப்தத்துடன் இந்த அடுப்பு வெடித்தது. அதன் கண்ணாடிச் சில்லுகள் டைனிங் ஹால் வரை தெறித்து விழுந்தன. சமையலறையிலோ காலைக்கூட வைக்க முடியவில்லை. அத்தனைத் துகள் கண்ணாடிகள் எங்கும். ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முன்பு வாங்கியது.

கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மெர்ஸி அம்மா நல்ல வேளையாக இது வெடிக்கும் பொழுது வேறு பக்கம் திரும்பி, ஒரு 4,5 அடி தொலைவில் தள்ளி நின்றிருந்தார். இருந்தும் அவருடைய கைகளில் சில கண்ணாடித் துண்டங்கள் பட்டு லேசான சிராய்ப்புகள் இருந்தன. (அவற்றையும் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் என்று பின்புதான் தோன்றியது). அவர் முகத்தில் தெரிந்த பயம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. (இன்னும் ஒரு சாக்குப் பையில் அத்தனைக் கண்ணாடிச் சில்லுகளையும் பொறுக்கியெடுத்து, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்)

டி.டி.கே கம்பெனி எம்மாதிரியான தரக் கட்டுப்பாடுகளை இந்தப் பொருளை சந்தைக்குக் கொண்டு வருமுன் கடைபிடித்தனர் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அதில் கோளாறு நடந்திருக்கிறது. சமையல் செய்யும் சூட்டைக்கூடத் தாங்க முடியாத கண்னாடிகளைத்தான் அவர்கள் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனரா? இம்மாதிரி ஒரு விபத்தை நான் எங்கேயும் கேள்விப் பட்டதில்லை. பிரஸ்டீஜ் கம்பெனிக்கு பல முறை அழைத்து சொல்லியாகிவிட்டது. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த முறை அவர்களை விடப்போவதில்லை. இப்படிபட்ட தரமற்ற அடுப்புகளை அவர்கள் சந்தையில் இருந்து திரும்ப பெற வேண்டும். டி.டி.கே கம்பெனியின் மீது நுகர்வோர் நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடர்ந்து என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறவும், இந்த மாடல் அடுப்புகளை அவர்கள் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தவும் மேற்கொண்டு ஆனவற்றைச் செய்ய வேண்டும்.

Close