வறுமையின் பிடியில் மருத்துவமனையில் தவிக்கும் சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சா

இந்திய சுதந்திர வரலாற்றில், தேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பல லட்சங்களை வாரி வழங்கி, அந்த போராட்டத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த தியாகி அமீர் ஹம்சா (வயது 91) இன்றைக்கு வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தியாகி அமீர் ஹம்சா சிகிச்சை பெற்று வருகிறார். தியாகி அமீர் ஹம்சாவின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சென்று பார்த்தார். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், வறுமையின் காரணமாக, மருத்துவ செலவுகளை கவனிக்க மிகுந்த சிரமப்படும் தியாகி அமீர் ஹம்சா அவர்களுக்கு, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தியாகி அமீர் ஹம்சாவின் நிலையை கருத்தில் கொண்டு சுதந்திர போராட்ட தியாகி என்ற அடிப்படையில் தமிழக அரசு அவருக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் ஏ,கே.கரீம் ஆகியோர் உடனிருந்தனர்.
தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திர தினத்தன்று கூட தியாகிகளின் பட்டியலில் சேர்த்து நினைவுகூற தமிழக அரசு தயாரில்லை.
பிரிட்டீஷாரால் நாடு கடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜி இந்திய தேசிய ராணுவப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர். இன்றைக்கு கேட்பாரற்று வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்.
சினிமா, நாடகத் துறையில் உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் அரசு சார்பாக உதவி செய்து வருகிறார். சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ செலவுக்காக ரூ.6 லட்சம் வரை உதவி செய்தார். ஆனால், தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அப்போதே பல லட்சங்களை வாரி வழங்கிய தியாகி அன்சாரியை தமிழக அரசு பாராமுகமாக இருப்பது வேதனையானது.

image

Close