தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதல்கட்டமாக 350 நபர்களுடன் முதல் விமானம் புறப்பட்டது

image

உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 2,799 பேர் ஹஜ் பயணத்துக்காக தேர்வு செய்யப்பட்டனர். இந்த புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

350 பேர் சென்றனர்

இந்த விமானத்தில் 164 பெண்கள் உள்பட 350 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்துக்கு சென்றவர்களை தமிழக அமைச்சர் அப்துல்ரகீம், தமிழக வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுதீன், அருள்மொழி ஆகியோர் சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

புனித ஹஜ் பயணத்துக்காக சென்னையில் இருந்து நேற்று முதல் 11–ந் தேதி வரை(8–ந்தேதி, 10–ந்தேதி நீங்கலாக) 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஹஜ் பயணிகளுக்காக விமான நிலைய நுழைவு வாயில் 4 ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல இவ்வாறு தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

Close