Adirai pirai
தமிழகம்

வேலூரில் பதற்றம்! சினிமா போன்று நடைபெற்ற கேங்ஸ்டர் சண்டையில் நடுரோட்டில் ஒருவர் கொலை

வேலூர் அ.தி.மு.க. பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி  கொல்லப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கத்துக்கும், ஜி.ஜி.ரமேசுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பகையே, கொலையில் முடிந்தது.
இதில் கைது செய்யப்பட்ட ரவுடி மகா மீது பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளும் இருந்ததால், வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த மகா தலைமறைவானார்.
ஜி.ஜி.ரமேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது அண்ணன் ஜி.ஜி.ரவிக்கும், ரவுடி மகாவுக்கும் இடையே இருந்து வந்த பகை மேலும் அதிகமானது. ரமேசை கொலை செய்தது போல ரவியையும் போட்டுத்தள்ள ரவுடி மகா திட்டம் போட்டு செயல்பட்டு வந்தார். இதற்காக நேரம் பார்த்து காத்திருந்த மகா, கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறும் சமயத்தில் ரவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நேற்று இரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஜி.ஜி.ரவி வந்திருப்பது மகாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது கூட்டாளி குப்பன் மற்றும் 2 பேருடன் காவி உடையில் மகா அங்கு சென்றார். அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரவுடி மகா பக்தர்கள் போல கூட்டத்துக்குள் நின்றபடியே கண்காணித்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப் பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த மகா, தாரகேஸ்வரர் கோவில் தெருவில் ஜி.ஜி.ரவி தனியாக நடந்து சென்ற போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, முகத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். அப்போது காட்பாடி சாலையில் பஸ் குறுக்கே வந்ததால் மகாவால் தப்பிக்க முடியவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்ட 30 பேர் கொண்ட கும்பல் மகாவை சுற்றிவளைத்து நடுரோட்டில் சரமாரியாக தாக்கினர். கம்பு, இரும்புகம்பியால் மகாவின் கை, கால்களில் அடித்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து பலியானார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.
பின் காயம் அடைந்த ஜி.ஜி.ரவி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் 400–க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரவுடி மகா அடித்து கொலை செய்யப்பட்டது, அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவிக்கு கத்தி வெட்டு விழுந்தது ஆகிய சம்பவங்களால் வேலூரில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy