தொடர்ந்து 22 நாட்கள் வீடியோ விளையாடிய சிறுவன் மரணம்

ரஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்களாக விடியோ கேம் ஆடிய 17 வயது சிறுவன் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் உச்சலி நகரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, வீடியோ கேம் என்றால் உயிர். இந்நிலையில் கடந்த மாதம், நடந்த விபத்து ஒன்றில், அவரது கால் எலும்பில், முறிவு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அப்போது, பொழுது போகாமல் போரடிக்கவே, டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் எனும் வீடியோ கேம்மை ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் என்ற விதத்தில் அவர் தொடர்ந்து 22 நாட்கள் விளையாடி வந்துள்ளார். சாப்பிடும் நேரம், துாங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த விளையாட்டை அவர் விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாள், அவனது அறையில் இருந்து, வீடியோ கேம் விளையாடும் சத்தம் இல்லாததால், அவனது பெற்றோர் சந்தேகமடைந்து, அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

உள்ளே மயக்கத்தில் இருந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த உறைவு நோயால் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என, அந்நாட்டு மனோவியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

Close