இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் B.S.N.L!

image

பி.எஸ்.என்.எல். தற்போது குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இணைய தள சேவையை வழங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவை வேகம் அதிகரித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய செல்போன் வாடிக்கையாளர்களையும், தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 1.78 கோடி செல்போன் வாடிக்கையாளர்களையும், 20 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் இழந்து உள்ளது. இதனால் ரூ.7 ஆயிரத்து 600 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் அதிவேக இணையதள சேவை திட்டத்தை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மேற்கண்ட நடவடிக்கை பெரிதும் உதவும் என்றார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம்– ஸ்ரீவாஸ்தா கூறும்போது, ‘‘இணையதள சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகரித்து உள்ளோம். அடுத்த மாதம் அக்டோபர் 1–ந் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்க உள்ளது.
வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கூடுதல் வேகத்தில் இணையதள சேவையை பெறலாம்’’ என்றார்.

Close