Adirai pirai
posts

அதிரையில் சதம் காணும் 2 மூத்த கண்மணிகள்! (இது கிரிக்கெட் சதம் அல்ல)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரோக்கியமான நீடித்த வாழ்வை நாம் ஒவ்வொருவரும் விரும்பக்கூடியவர்களே! அல்ஹம்துலில்லாஹ் அந்த பாக்கியத்தை அல்லாஹ் இந்த இரு மூத்த சகோதரிகளுக்கு வழங்கியுள்ளான் என்ற போதும் நாமும் அவர்களுக்காக இறைஞ்சுவோமாக!

நமதூர் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் தொ.க.முகைதீன் அப்துல் காதர் ரவுத்தர் அவர்களின் 5 மகள்களில் இன்றும் ஹயாத்தாக உள்ள ஜெமீலா அவர்களை பற்றியும் அவர்களின் தங்கையான ஆசியா மரியம் அவர்களை பற்றியும் தான் நாம் இங்கே மிகச்சில தகவல்களை பகிர்ந்து கொள்ள போகிறோம்.

(குறிப்பு: இச்சகோதரிகள் போல் மூத்த மக்கள் அதிரையின் பிற பகுதிகளில் வாழ்ந்தால் அல்லது வாழ்ந்து மறைந்திருந்தால் அவர்களை பற்றிய குறிப்புகளை அறிந்தவர்கள் பதியுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்)
இவர்கள் தான் ஜெமீலா என்கிற மூத்த சகோதரி

இவர்கள் தான் ஆசியா மரியம் என்கிற இளைய சகோதரி

இச்சகோதரிகளில் முறையே ஜெமீலாம்மா 96 மற்றும் ஆசியா மரியம் 95 வயதுடையவர்கள் என்றும், 100 ஆண்டுகளை கடந்துவிட்டவர்கள் என்றும் இருவகையான தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் முறையான ஆவணங்கள் பாராமரிக்கப்படாததால் சரியான வயதை உறுதி செய்ய முடியவில்லை.

வாரிசுகளால் ‘தண்ணிக்கும்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஜெமீலாம்மா அவர்களும், ‘தொத்தம்மா’ என அழைக்கப்படும் ஆசியா மரியம் அவர்களும் தந்தைவழியில் ஒரு செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்களுடைய தந்தை முறையே 1940 மற்று 1941 ஆம் ஆண்டுகளில் திருமணத்தை நடத்திவைத்து சகோதரிகளுக்கு சீதனமாக எழுதிக் கொடுத்த சொத்துப் பத்திரங்களில் மூலமே இவர்களின் வயதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

இச்சகோதரிகள் இன்றும் தேனீயை போன்று சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக்கூடியவர்களாக, நோய் நொடி என மருத்துவமனை பக்கம் செல்லாதவர்களாக, ஞாபக சக்தி உள்ளவர்களாக, கேட்கும் சக்தி உள்ளவர்களாக, தடையின்றி பேசுபவர்களாக, நல்ல கண் பார்வையுடையவர்களாக திகழ்கின்றனர் என்றாலும் வயது முதிர்வின் காரணமாக மட்டுமே அவர்கள் இருவரும் உடல்ரீதியாக தளர்வடைந்துள்ளனர்.

ஜெமீலாம்மா அவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 4 பெண் பிள்ளைகள் என 7 வாரிசுகள் மூலம் பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் மற்றும் மிக சமீபத்தில் மகள் வழி கொள்ளுப்பேரனுக்கு ஒரு குழந்தை பிறந்ததன் மூலம் 4 தலைமுறையினரை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது.

ஆசியா மரியம் அவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் மற்றும் 2 பெண் பிள்ளைகள் என அறுவர் வழியாக கொள்ளுப்பேரன் பேத்திகள் வரை 3 தலைமுறைகளை காணும் பாக்கியம் பெற்றுள்ளார்கள். இவர்களுடைய மூத்த மகன் மர்ஹூம் அன்வர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இவர்களுடைய ஏனைய மகன்கள் தான் (மளிகை கடை) அப்துல் ரெஜாக் காக்கா மற்றும் அப்துல் வாஹித் காக்கா ஆகியோர்.

அதிரை மரபின்படி, சகோதரிகள் இருவரும் தங்கள் மகள்வழி வாரிசுகளின் வீடுகளில் தனியே பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இச்சகோதரிகளின் இன்றைய வாரிசுகள் வரை அனைவரும் தங்களுக்கு கிடைத்த இந்த அருமையான பொக்கிஷங்ககளை கண்ணியத்துடன் பாதுகாத்து வருகின்றனர். அல்லாஹ் இவர்களுடைய வாரிசுகளையும் இதேபோல் மறுமையில் ஆதரித்து கண்ணியப்படுத்துவானாக!

ஜெமீலாம்மா அவர்களிடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என வேண்டிக் கொண்டபோது உச்சிமுகர்ந்து ஏகன் அல்லாஹ்விடம் அவர்கள் மனமுவந்து எங்களுக்காக பிரார்த்தித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

இச்சகோதரிகளின் தந்தைவழி உறவினர்கள் இன்னும் திருச்சி தொட்டியம் பகுதியில் TK ஹார்டுவேர்ஸ் என்ற நிறுவனத்தை இன்றும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமீலாம்மாவின் மகனான சகோதரர் ஜமால் உசேன் அவர்களிடமிருந்தும், ஆசியா மரியம் அவர்களின் ஒரு மகள் மற்றும் ஒரு மகனான அப்துல் வாஹித் ஆகியோர்களிடமிருந்து இவர்களை பற்றிய இந்தத் தகவல்கள் திரட்டப்படட்டன, அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

(குறிப்பு: நமது விடுப்பு மிக மிகக்குறுகிய காலம் என்பதால் சகோதரர் அப்துல் ரெஜாக் அவர்களை சந்திக்க முடியவில்லை, ஒருவேளை சந்தித்திருந்தால் இன்னும் அதிக தகவல்கள் கிடைத்திருக்கலாம்)


சந்திப்பு மற்றும் எழுத்து வடிவம்
உம்மு ஹாரித் உடன் அதிரை அமீன்

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy