அதிரையில் மதம் கடந்த சகோதரத்துவதிற்க்கு ஓர் எடுத்துக்காட்டு – “புள்ள” இஸ்திரி கடை

image

 

முஸ்லீம்கள் மட்டுமே நிறைந்திருக்கும் அதிரையின் பிரதான தெருவின் தர்ஹா வளாகத்தில் அமைந்திருக்கிறது அந்த இஸ்த்திரி நிலையம்.
அதற்கென தனி போர்டுயில்லை,விளம்பர­மில்லை ஆனாலும் சலவைக்கு வரும் துணிக்கு பஞ்சமில்லை.
அதன் உரிமையாளர் மாற்றுமதத்தவர் என்பதை அவரே சொன்னாலும் வெளியூர்வாசிகள் நம்பமாட்டார்கள் அதுபோல முஸ்லீம்களோடு சகோதர பிணைப்பாய் இணைந்தவர்.
அவர் கடையை சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்து முஸ்லீம் வீடுகளிலும் திருமணம் போன்ற விழாக்களுக்கு கண்டிப்பாய் இவருக்கும் அழைப்பு இருக்கும்.
எங்களூரின் வீட்டு விழாக்கள் என்றால் ஒரு விஷேஷ சிறப்புண்டு. இங்கு விருந்தில் தனி சாப்பாடு என்று கிடையாது. நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் ‘சஹன்’ என்னும் பெரிய தட்டிலே பரிமாறப்படும். அதிலேதான் இந்த சகோதரனோடு தொடை ஒட்டியே உக்கார்ந்து ஒரே தட்டில் ஒன்றாய் சாப்பிடும் அழகே தனிதான்.
அவரின் பெயர் என்னவென்று இதுவரை எனக்கு தெரியாது ஆனால் அனைவரும் “புள்ள” என அன்பாய் அழைப்போம். அனைவரிடமுமே இவர் குழந்தை சிரிப்போடு பழகியதால் யாரோ அப்படி செல்ல பெயர் வைத்து அழைத்திருக்கலாமோ என்றே எண்ணுகிறேன்.
அன்பும் பாசமும் சகோதரத்துவமும் ஒருங்கே இணைந்த எங்கள் தோழன் ‘புள்ள’.
இதுபோலே அனைத்து மதத்தவர்களுமே சகோதரத்துவமாய் பழகுவதை பொறுக்காத, நம்மை பிரிக்க நினைக்கும் மதவெறியர்களை அடித்து விரட்டுவோம். மதங்கள் வேறாயினும் சகோதரத்துவமாய் உரக்க சொல்லுவோம் “நான் இந்திய தமிழன்டா”.

-அதிரை உபயா

Close