பிரான்ஸில் அடுத்தடுத்து தாக்குதல்!துப்பாக்கிச்சூடு – பல மசூதிகள் மீதான குண்டுவீச்சால் பதற்றம்!

பிரான்ஸில் தலைநகர் பாரீஸ் அருகே அதிர்ச்சியூட்டும் வகையில் அடுத்தடுத்த தாக்குதல்கள் நடந்துள்ளது. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு ஆங்காங்கே மசூதிகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்குப் பகுதியான செத்தலியான் என்ற இடத்தில் குண்டு துளைக்காத கவசம் அணிந்த 2 மர்ம நபர்கள் அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அங்கு பணியில் இருந்த பெண் போலீஸார் மற்றும் துப்புறவு தொழிலாளர் என இருவர் உயிரிழந்தனர்.

மசூதிகள் மீது தாக்குதல்:

முதலாவதாக பிரான்ஸின் லே மான்ஸ் நகரில் வழிபாடு நடந்து கொண்டிருந்த மசூதி மீது மர்ம நபர்களால் கையெறி குண்டு வீசப்பட்டது.

அதேப் போல, தெற்கு பிரான்ஸின் நெர்பெர்ன் அருகே இருக்கும் மசூதி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தபோது மசூதியில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு பிரான்ஸின் வியேல்பிரான்ஸ் பகுதியில் இருக்கும் மசூதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நடத்தப்பட்டுள்ள இந்த தொடர் தாக்குதலுக்கு அங்கு உள்ள முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சாலைகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், தற்போது நடந்திருக்கும் சம்பவத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில் விசாரணை நடந்து வருவதாக பாரீஸ் நகர பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பிர்னார்ட் காஸுனுவே விரைந்துள்ளார். பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்திருக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதல் அந்நாட்டு மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரீஸில் புதன்கிழமை சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிகை ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 18 வயதான இளைஞர் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக தாக்குதல் நடத்தப்பட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை கிண்டல் செய்யும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டது. இதற்கு பழி வாங்கும் வகையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய கருத்துச் சித்திரத்தை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலக தாக்குதலில் கொல்லப்பட்ட கார்ட்டூனிஸ்டுகளில் ஒருவர் முகமது நபியை சித்தரித்து கருத்துச் சித்திரத்தை வரைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் அல் – காய்தாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் பிரான்ஸ் முக்கியத் தலைவர்களின் பெயரை பட்டியலிட்டு அவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாக தங்களது இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டனர்.


Advertisement

Close