பிரபல செய்தி ஊடகங்களில் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பற்றி பதியப்பட்ட பதிவுகள்!!

தினகரன்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும்,  சேனா ஆனா என்று அழைக்கப்படும் வள்ளல் பி. எஸ். அப்துர்ரஹ்மான் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும், ரியல் எஸ்டேட், கட்டுமான‌ம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின் நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார். பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணை வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்து வருகிறார். 

கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி, முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் ,கலைஞர் கருணாநிதி ,ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர். இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வளைகுடா மற்றும் இந்தியாவில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.


ஒன் இந்தியா :

பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார். 

சென்னை: பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்று மாலை சென்னையில் காலமானார். கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பொறியியல் கல்லூரியை நிறுவியவர் ஆவார். தற்போது இது பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான். மறைந்த அப்துர் ரஹ்மானின் உடல் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

_


மாலை மலர்:


மறைந்த பி.எஸ். அப்துர் ரஹ்மான் உடல் அடக்கம்- மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை: மறைந்த கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மானின் உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்ததால் இருமுறை ஜனாஸா தொழுகை நடந்தது.
அதே போல துபாயிலும் அவருக்காக இன்று சிறப்புத் தொழுகை நடக்கவுள்ளது. துபாய் சலாஹூதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுஸில் 3வது மாடியில் உள்ள பிரேயர் ஹாலில் துபாய் நேரப்படி இன்று பிற்பகல் 3.40 மணிக்கு சிறப்புத் தொழுகை நடக்கவுள்ளது. மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்துர் ரஹ்மானின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் நேற்று மாலை சென்னையில் காலமானார். சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் உள்பட பல கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அறக்கட்டளைகளின் நிறுவனர் அப்துர் ரஹ்மான். மேலும் துபாயின் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் இணை நிறுவனரும் கூட. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழகத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர். நேற்று மாலை அவர் காலமானார். அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாரின். இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், ஹாஜி பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்கள் தன் சொந்த முயற்சியினால் உழைத்து முன்னேறியவர். கொடைவள்ளலாகத் திகழ்ந்த அவர் இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் இன்று மட்டுமல்ல என்றும் நினைவிலிருந்து அகலாது. அவரது மறைவால் வாடும் அவர் குடும்பத்திற்கும், அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவோர் மட்டுமின்றி அவரை தந்தையாகவும், வழிகாட்டியாகவும் கருதிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை இந்த நேரத்தில் தெரிவி்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

_

தி இந்து (தமிழ் நாளிதழ்)

பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார்

பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி இன்று வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலை. வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு 1927-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார் அப்துர் ரஹ்மான். ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மற்றும் ஹமீதியா பள்ளிகளில் படித்தவர். கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள்.

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் ஆவார். சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளிக்கூடம், கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிறுவனர்.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான் ஸ்டார் நிறுவனம், ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைகா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜிவ் மற்றும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். துபாயில் ஒரு பகுதியிலுள்ள தெருவுக்கு அந்நாட்டு அரசு பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பெயரை சூட்டியுள்ளது. தனது திரைப்படம் ஒன்றில் அப்துர் ரஹ்மானை மனதில் வைத்து ஒரு பாடலை இடம் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.
இவர் சிறு வயதிலேயே இலங்கைக்கு சென்று வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். நாளடைவில் உலகிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரானார்.

மாலை மலர்

துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவன அதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்

தொழிலதிபரும் கல்வியாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

கீழக்கரையைச் சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹ்மான் துபாயில் உள்ள அல் குரைர் நிறுவனத்துடன் இணைந்து துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தை ஏற்படுத்தியதன் காரணமாக லட்சக்கணக்கான தமிழர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தார்.

சத்யபாமா பல்கலைக்கழகம் இவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் உடல் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு லுஹர் தொழுகைக்கு பின்னர் வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், உலக தமிழ் பண்பாட்டு கழக தலைவர் ரபியூதின் மற்றும் பலர் நேரில் சென்று அப்துர் ரஹ்மான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


Advertisement

Close