Adirai pirai
EID SPECIAL islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் பெருநாள் பசியாறுதலும், அசைக்க முடியாத மத ஒற்றுமையும்!

58_bigஅதிரையை பொருத்தவரை ஒவ்வொரு பெருநாள் அன்றும் காலை பெருநாள் பசியாரை மிகவும் பிரபலமானது. “அடுக்கு ரொட்டி, பொறிச்ச ரொட்டி, இடியாப்பம், வட்லாப்பம், பால் கடபாசி, இறைச்சி ஆனம், ரவ்வா” போன்ற அருசுவை உணவுகளை பெருநாள் பசியாரை என்று அழைப்பது வழக்கம். பிற இஸ்லாமிய ஊர்களில் பெருநாள் என்றால் பிரியானி தான் ஃபேமஸ். ஆனால் நமதூரை பொருத்தவரை இந்த பெருநாள் பசியாரை தான் பிரசித்தி பெற்றது.

இந்த உணவுகளை தயாரிப்பதை முதல் நாளிலேயே நமதூர் பெண்கள் துவங்கிவிடுவார்கள். அதுவும் கூட்டு குடும்பமாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். கூட்டு குடும்பத்தில் பெண்கள் ஆளாளுக்கு ஒரு உணவை தயாரிப்பார்கள். உம்மா பரோட்டா மாவு பிசைந்தால், ராத்தா பொரிச்ச ரொட்டி சுட, தங்கச்சி கடபாசி காய்ச்ச, ராத்தம்மா ரவ்வா காய்ச்ச, சாச்சி இடியாப்பம் சுட, பெரியம்மா இறைச்சி ஆனம்” காய்ச்ச மிகவும் இனிமையாக இருக்கும். பெருநாள் அன்று தாங்கள் சமைத்த உணவுகளை மாற்றி மாற்றி ருசி பார்த்து தங்களுக்குள் அன்பாக போட்டியிட்டு கொள்வார்கள்.

மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும் பெருநாள் பசியாரை குடும்ப நபர்களை தவிர்த்து சற்று அதிகமாகவே சமைப்பார்கள். காரணம் தங்களுக்கு தெரிந்த மாற்று மத சகோதர குடும்பங்களுக்கு வழங்குவதற்காக. பெருநாள் அன்று காலை நமதூர் மக்களின் விருந்தோம்பலையும், அன்பளிப்பு வழங்குவதையும் பார்க்கலாம். பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியரின் வீடு மேலத்தெரு, சி.எம்.பி லேன், கடற்கரைத் தெரு போன்ற பகுதிகளில் இருக்கும். ஆனால் அவர்கள் தூரம் பாராது தனக்கு தெரிந்த மாற்றுமத சகோதரின் வீடு கரையூர் தெருவாக இருக்கட்டும், பழஞ்செட்டித்தெருவாக இருக்கட்டும் காலை தான் சாப்பிடுவதற்க்கு முன்னதாக தங்கள் மாற்றுமத நண்பருக்கு இந்த பெருநால் பசியாரை யை வழங்குவார்கள்.

இதில் அதிரை இஸ்லாமிய மக்கள் ஏற்றத்தாழ்வுடனோ, எதிர்பார்ப்புகளுடனோ விருந்தை கொடுப்பதில்லை. மாறாக தனது வீட்டை கட்டிய கொத்தனாராக இருக்கலாம், ஆசாரியாக இருக்கலாம், தன்னுடன் பள்ளி, கல்லூரிகளில் படித்த நண்பராக இருக்கலாம் அல்லது தான் வேலை செய்யும் மாற்றுமத முஸ்லிமாக இருக்கலாம். அனைவருக்கும் மதவேற்றுமைகளை களைந்து விலையில்லா அன்பை இந்த பெருநாள் பசியாரை மூலம் அதிரை இஸ்லாமிய மக்கள் வெளிபடுத்துகின்றனர்.

இந்த பாசப்பிணைப்பு நமதூர் முஸ்லிம், இந்து, கிருஸ்தவ மத சகோதரர்கள் மத்தியில் இருக்கும் வரையும் நம்மை எந்த மதவாத சக்தியும் நம்மை பிரிக்க முடியாது.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

இஸ்லாத்தில் விருந்தோம்பல் குறித்து மிகவும் வழியுறுத்தி கூறப்பட்டுள்ளது. அது குறித்த ஹதீஸ்கள் பின்வருமாறு…

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்{ஹ தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.
அப்போது அல்லாஹ் ,

‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.

‘எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்’ என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். புஹாரி  அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு).

மேலும், அ(வ்விறை)வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8)

”அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறுவார்கள். (76:9)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

”யாராவது ஒருவர் ஒரு சமூகத்தினரை விருந்தினராக ஏற்கும் போது அவர்கள் வறுமைக்குட்பட்டவராக இருந்தால் அவர்களுக்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். தனது பொருள், தனது விவசாயத்திலிருந்து அவர்களுக்கு விருந்து கொடுத்து உதவ வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத், அஹமத்

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். விருந்தாளிக்குப் பரிசு ஓர் இரவும் ஒரு பகலும், அதிகப்படியாக விருந்து உபசரிப்பு மூன்று நாட்களாகும், அதற்கு பின்னால் உள்ள உபசரிப்பு தர்மமாகும். விருந்தாளி விருந்து கொடுப்பவருக்கு கஷ்டம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. குவைலித் பின் அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

வானவர்கள் சிலர் என்னிடம் வந்து, ”இவருக்கு உதாரணம் கூறுங்கள்” என்று தமக்கிடையில் கேட்டு கொண்டார்கள். ஒருவர் ஒரு வீட்டைக் கட்டி அதில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கவும் ஒருவரை அனுப்பிவைக்கிறார். யார் அந்த அழைப்பை ஏற்றார்களோ, அவர்கள் அவ்வீட்டில் நுழைந்து விருந்து உண்பார்கள். யார் அழைப்பை ஏற்கவில்லையோ அவர்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். விருந்தும் உண்ணமாட்டார்கள். இதுவே இவருக்கு உதாரணமாகும் என்று கூறினார்கள். வீடு என்பது சுவர்க்கமாகும். அழைக்கச் சென்றவர் முஹம்மத்(ஸல்) அவர்களாவார் என வானவர்கள் விளக்கம் அளித்தனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) : புகாரி

”யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹுரைரா(ரலி) : புகாரி

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் கலந்து கொள்ளவேண்டாம், என  நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) : அஹமத்

செல்லவந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூஹுரைரா(ரலி) : புகாரி)

விருந்து மூன்று நாட்களாகும். ஒருவரது உரிமை ஒரு பகல் ஒரு இரவாகும். அதன் பின்னர் செலவு செய்பவை தர்மமாகும். விருந்துக்குச் செல்பவர், விருந்தளிப்பவருக்கு சிரமமளிக்கும் அளவுக்குத் தங்குவது ஹலால் இல்லை. அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ

ஒரு கூட்டத்தாரிடம் விருந்தாளியாகச் செல்பவர் அவர்களின் அனுமதியின்றி நோன்பு வைக்கக்கூடாது. ஒரு கூட்டத்தினரின் இல்லத்தில் நுழைபவர் அவ்வீட்டார் அமரச் சொல்லும் இடத்தில் அமரட்டும், ஏனெனில் அவ்வீட்டார் தான் தமது இல்லத்தின் அந்தரங்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள். அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ

சல்மான்(ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார் அவருக்காக தன்னிடம் உள்ளதைக் கொண்டு வரச் செய்தார்கள். தனது தோழருக்காக சிரமம் எடுத்துக்கொள்வதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்காவிட்டால் உமக்காக நாம் சிரமம் எடுத்துக் கொண்டிருப்போம் என்று சல்மான்(ரலி) கூறினார்கள். ஷகீக் பின் ஸலமா(ரலி) : அஹ்மத், தப்ரானி

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடியவர் தனது விருந்தினருக்குரிய கடமையைச் செய்து அவரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று  நபி(ஸல்) கூறிய போது ”அவருக்குரிய கடமை யாது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு  நபி(ஸல்) அவர்கள் ”ஒரு பகல் ஒரு இரவு” என்று விளக்கம் தந்துவிட்டு விருந்து (அதிகபட்சம்) மூன்று நாட்களாகும். அதன் பின்னர் அளிக்கப்படுவது தர்மமாகும் எனவும் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதரிடம் அவரது சகோதரர்களில் சிலர் வரும்போது, தன்னிடம் உள்ள (சாதாரண உணவை) அவர்களுக்கு முன் வைப்பதை இழிவாகக் கருதுவது அவருக்கு நாசமாகும், ஒரு கூட்டத்தினருக்குப் பரிமாறப்படுவதை அவர்கள் இழிவாகக் கருதுவது அவர்களுக்கு அது அழிவாகும். ஜாபிர்(ரலி) : அஹ்மத், தப்ரானி (அவ்ஸத்)

அனஸ்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களை நோய் விசாரிக்க சிலர் வந்தனர். ”பணிப்பெண்ணே! நமது தோழர்களுக்காக ரொட்டித் துண்டையேனும் கொண்டு வா” என்று கூறிவிட்டு ”நல்ல பண்புகள் சுவனத்திற்கான அமல்களில் உள்ளவையாகும்” என்று நபி(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.ஹுமைத் : தப்ரானி

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)