கீழே கிடந்த 1.17 லட்சம் ரூபாயை போலிஸிடம் ஒப்படைத்த குரைஷியின் நேர்மை

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையோரம் அனாதையாக கிடந்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி போலீசாரிடம் அளித்த நேர்மை போலீசார் மற்றும் ஊடகங்களின் வெகுவான பாராட்டை பெற்றுள்ளது.  ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் பகுதியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலை செய்து பிழைத்து வரும் ஆபித் குரைஷி(25) என்பவர் கடந்த புதன்கிழமை மாலை இங்குள்ள அரசு விடுதியின் வாசலில் கேட்பாரற்று கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவரை கண்டெடுத்தார்.  அதைப் பிரித்துப் பார்த்தபோது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை யாரோ தவறவிட்டு போனதை அறிந்த அவர், அந்தப் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக அதே இடத்தில் இரவு 10 மணிவரை காத்திருந்தார். எனினும், அந்த தொகைக்கு உரிமைகோரி யாருமே வராததால் வீடு திரும்பிய ஆபித், தனது மனைவி ஆமினாவிடம் விபரத்தை கூறினார்.  உழைக்காமல் கிடைத்த பணத்தை நாம் வைத்துக் கொள்வது நியாயம் இல்லை. இதை போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம். அவர்கள் சட்டப்படி என்ன செய்கிறார்களோ..? செய்துக் கொள்ளட்டும் என ஆமினா அறிவுறுத்தினார். இதற்கு சம்மதித்த ஆபிதால் அவ்வளவு பணத்தை வீட்டில் வைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்க முடியவில்லை.  போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பணத்தை ஒப்படைத்தால் நம் மீதே வழக்கு போட்டு விடுவார்களோ..,? என்ற மனப் போராட்டத்துடன் விடிய, விடிய விழித்திருந்த ஆபித், மறுநாள் காலை தனது வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் இதுபற்றி கூறி ஆலோசனை கேட்டார்.  ‘அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள். புதிதாக ஏதாவது தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வர முயற்சி செய்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.  ஆனால், முறையற்ற வகையில் கிடைத்த பணத்தால் நன்மையை விட தீமையே அதிகம் நேரும் என்பதை அறிந்திருந்த ஆபித்தும், ஆமினாவும் நேராக ஜெய்ப்பூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றனர். கமிஷனர் ஜங்கா சீனிவாச ராவிடம் கவரினுள் இருந்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்தனர்.  அவர்களின் நேர்மையை வெகுவாக பாராட்டிய ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர், இது தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் அளித்ததையடுத்து, ஆபித்தை பேட்டி காண ‘நான் – நீ’ என்று மைக்களும், கேமராக்களும் அவரை வட்டமிட்டுக் கொண்டுள்ளன.  விரைவில் ஜெய்ப்பூர் நகர போலீசாரின் சார்பில் அவரை கவுரவிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

image

Close