மீலாதுந்நபி வாழ்த்துக் கவி

இறையருளால் மீலாதுந்நபி(ஸல்) நிகழ்ச்சி அபுதபியில் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் ”மௌலூத் கமிட்டி, அபுதபி” யினரால் நடத்தப்பட்டது;காயல்பட்டினம் மௌலவி ஹாபிழ்ஹபீபுர்ரஹ்மான் மஹ்லரி அவர்கள் தலைமையுரையுடன்  அவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி காஜா முஐனுதீன் பாகவி அவர்களின் சிறப்புரையும், தேனிசைப்பாடகர் தேரிழந்தூர் தாஜூத்தீன் அவர்களின் பாடல்களும் இடம்பெற்றன ( எ12 நாள் தொடர் மவுலித் ஷரிஃப் ஓதி முடித்த பின்னர் , இறுதி நாளாய் நேற்றிரவு) அவ்விழாவில் அடியேனையும் அழைத்திருந்தனர்; கவி பாட வேண்டினர்; இதோ என் கவிதை அங்குப் பாடினேன், எம்பெருமானார் முஹம்மத்(ஸல்)அவர்களின் முஹப்பத் மேலோங்கிய வண்ணம் என் எழுத்துக்களாய்த் தரும் எண்ணம்:
பூமான் நபிகள் பிறக்காம(ல்)
      பூமி என்றும் சிறக்கா(து)
கோமான் நபியின் வரவால்
       கொடுமை உலகில் குறைவாம்
நாமாய்த் தேடாச் செல்வம்
      நமக்குக் கிடைத்த மார்க்கம்
ஈமான் ஊட்டும் வேதம்
     ஏந்தி வந்த தூதாம்!
பாலை வனத்தின்  ரோஜா
     பாரோர் போற்றும் ராஜா
மேலை நாடும் வியக்கும்
      மேன்மை ஞானம் சுரக்கும்
காலைக் கதிராய் வீசும்
       கல்பின் ஒளியே பேசும்
சோலை வனத்தின் வாசம்
      சுவனம் காட்டும் நேசம்!
உம்மத் நினைவால் வாடும்
    உயர்ந்த நிலையை நாடும்
உம்மைக் காண தேடும்
    உள்ளம் இதனைப் பாடும்
எம்மில் இல்லா(த) போதும்
    என்றும் ஸலவாத் ஓதும்
எம்மை இணைக்கும் உறவு
    இதனால் மறந்தோம் பிரிவு!
பகைவர்க்(கு) அருளும் நெஞ்சம்
     பணிவும் உம்மைக் கெஞ்சும்
மிகைக்கும் வீரம் வெல்லும்
     மேன்மை வெற்றிச் சொல்லும்
நகைக்கும் வஞ்சம் கொண்டோர்
     நன்றாய் உணர்ந்து மீண்டார்
திகைக்கும் நாளை மறுமை
    தேடி வருவோம் உம்மை!

Close