பிறையின் பார்வை: வாழ்க்கை ஒரு வட்டம்! பெற்றோரை தவிக்க விட்டவனை தன் மகன் தவிக்க விடுவான்!

வயதான தாயை ஆட்டோவில் ஏற்றி வந்து, பெற்ற மகனே பஸ் நிலையத்தில் வீசி சென்ற கொடுமையை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் மனைவி சரோஜா (65). இவர், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் பசி, பட்டினியுடன் நோய்வாய்ப்பட்ட நிலை யில் நேற்று கிடந்தார். இதேபோல், உத்திரமேரூர் அடுத்த மருதம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி சரஸ்வதி (80)யும் பஸ் நிலைய பயணிகள் உட்காரும் இடத்தில் பெட்டி, படுக்கைகளுடன் அநாதையாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் அடிபட்டு கிடந்தால்தான் வருவோம் என்று கூறி பிடிவாதமாக வர மறுத்துவிட்ட னர்.

 பின்னர் 1079 என்ற “ஹெல்ப் லைன்“ எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதற்கு போலீசில் புகார் கொடுத்தால்தான் வருவோம் என்று கூறி அவர்களும் வர மறுத்துவிட்டனர். பின்னர், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கத்திடம் புகார் கூறினர். இதையடுத்து, எஸ்ஐக்கள் தனசேகரன், முகமதுஅலி ஆகியோர் வந்து இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது மூதாட்டி சரோஜா போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறுகையில், ‘‘நான் நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில், எனது மகன் கஜேந்திரன் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறி வீட்டிலிருந்து என்னை அதிகாலை 5 மணியளவில் ஆட்டோவில் அழைத்து வந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டார்‘‘ என்றார். 
இதேபோல், சரஸ்வதி கூறுகையில், ‘‘எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் நாகராஜ் என்னை தனியாக தவிக்கவிட்டுவிட்டு அவரது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார். 

இதனால் மகள் கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எனது மருமகன் தாமஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊருக்கு போகலாம் வா என்று கூறி ஆட்டோவில் என்னை அழைத்து வந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்று விட்டார். நான் சாப்பிட்டு 6 நாட்கள் ஆகிறது. என்னிடம் பணமும் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு அசிங்கமாக உள்ளது. சிலர் என் மீது பரிதாபப்பட்டு ரூ.5 அல்லது 10 கொடுப்பார்கள். அதை வைத்து டீயும், பன்னும் சாப்பிட்டு பஸ் நிலையத்திலேயே கொசுக்கடியில் தூங்கி வருகிறேன் என்றார். இதை தொடர்ந்து போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து சரோஜாவை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரஸ்வதியை மீட்டு காரில் அவரது மகள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். மூதாட்டிகளின் நிலைமையை பார்த்து அங்கு நின்ற பெண்கள் கண்ணீர் வடித்தனர்.
-தினகரன் செய்தி

பிறையின் பார்வை: (அதிரை பிறை கருத்து)

தன் வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து, அனைத்து இன்பங்களையும் இழந்து, அனைத்து துன்பங்களையும் தாங்கிக் கொண்டு,  பத்து மாதங்கள் நரக வேதனையிலும் தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்ற ஆறுதலை மட்டும் மனதில் வைத்து தன்னை பெற்றெடுத்த தாயை இப்படி நடு ரோட்டில் தவிக்க விட்டுச்சென்ற இந்த கொடுர மனம் படைந்தவர்களை என்னவென்று சொல்வது?

குழந்தை பிறந்த பின்பு தன் இரத்தத்தை பாலாக அளித்து குழந்தைக்காக அனைத்து இன்பங்களையும் இழந்து தூக்கமின்றி, உணவின்றி குழந்தை வளரும் வரை வெளியில் செல்ல முடியாமல் குழந்தையையே வாழ்கை என்று நினைத்த அந்த மங்கையை நடுரோட்டில் தவிக்க விட்ட இந்த அரக்கர்களை என்ன செய்வது?

வளர்ந்த பின்பு நன்றாக படிக்க வைப்பதற்க்காக செல்வங்களையெல்லாம் வாரி இறைத்து தன் மகனை நல்ல ஆளாக ஆக்குவதற்க்காக பாடுபட்டு பிடித்தவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்து ராஜாவை போல் வளர்த்த அந்த அரசியை நடுரோட்டில் விட்டுச்சென்ற அந்த தீயவர்களை என்னவென்று சொல்வது?

பருவம் வந்த பின் நல்ல முறையில் திருமணம் செய்து தன் பிள்ளையை பார்த்து அகம் மகிழந்த அந்த நல்ல மனம் படைத்த தன் தாயின் மனதை உடைத்தெரிய இவனுக்கு எப்படி மனம் வந்தது?

தன் பிள்ளைக்கு துன்பம் வரும் சமயம் அதை தனக்கு வரும் துன்பமாக எண்ணி தொலோடு தோல் கொடுத்த அந்த நல்ல நெஞ்சை காயப்படுத்த இவனுக்கு எப்படி மனம் வந்தது?

தன்னை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற இவனுக்கு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற சிந்தனை வரவில்லையா?

“வாழ்க்கை என்பது வட்டம்” என்பார்கள். தன் பெற்றோரை தனியே சாலையில் அனாதையாக தவிக்க விட்ட இவனை இவனது பிள்ளைகள் இந்த நிலையில் விடமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

நாம் நம் குழந்தைகள் மீது வைத்த பாசத்தை தானே நம் மீதும் நமது பெற்றோர்கள் வைத்து நம்மை வளர்த்திருப்பார்கள் என்ற எண்ணம் ஒருவனுக்கு வந்தால் அவன் ஒருபோதும் தன்னுடைய பெற்றோருக்கு தீங்கிழைக்க மாட்டான்.

தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். எனவே பெற்றோரை மதித்து அவர்களின் கடமையை நிறைவேற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகுவோமாக.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இன்றைய பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு “நன்றாக படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும்” என்று உபதேசம் செய்கிறார்களே அன்றி யாரும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தன்னுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. இனி வரும் காலங்களில் தன்னுடைய பிள்ளைகளிடம் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளையும் கடமைகளை பற்றியும் உபதேசம் வழங்கி நம் பிள்ளைகளை பெற்றோர்களை மதித்து நடப்பவர்களாக ஆக்குவோமாக!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

சிந்திப்போம்! செயல்படுவோம்!

Advertisement

Close