அதிரை மக்களை ஆட்டிப்படைக்கும் வட்டி!

image

நமதூரில் பல தெருக்களில் பல மக்களிடம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வட்டியை ஒழிப்பது எப்படி???

அன்றாட பிழைப்பின்றி உணவு உடையின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு வழியின்றி வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், மகள், சகோதரியின் திருமணத்திற்காக வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், நடுத்தர வாழ்வை மகிழ்ச்சியாக கழித்தாலும் ஆடம்பர பொருட்களுக்காக வட்டி வாங்கும் மக்கள் ஒரு பக்கம், வட்டி என்பது ஹராம் என தெரிந்தும் வட்டிக்கு விடும் பணக்காரர்கள் ஒரு பக்கம் என அதிரையில் வட்டி தலைவிரித்தடுகிறது.

நமதூரில் வட்டி குறைவு என நினைக்கிறோம், ஆனால் பல பெண்கள் காஃபிர்களிடம் வட்டி வாங்கி வருகின்றனர். பணம் தரவில்லையென்றால் காஃபிர்கள் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டுவதும் நடக்கின்றது. நாம் ஒரு பகுதியை மட்டுமே அதிரை என நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் பல தெருக்களில் வட்டியின் கோர முகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!

வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.

நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)

வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)

பைத்துல்மால், தெரு முஹல்லாக்கள், பல சங்கங்கள், எண்ணிலடங்கா அமைப்புகள் நமதூரில் இருந்தும் நமதூர் மக்களை வட்டியில் இருந்து மீட்க முடியவில்லையே…..!!!

இதற்கு காரணம் என்ன??? இதனை ஒழிப்பது எப்படி??? அறிந்தவர்கள் ஆலோசனை வழங்கலாமே!!!

நூருல் இப்னு ஜஹபர் அலி
ஆசிரியர், அதிரை பிறை.

Close