சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் உபயோகித்த சிறுவன்! செல்போன் வெடித்ததில் படுகாயம்!

செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்  மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த பூங்காவனம்-அருள் நாயகி தம்பதியினருக்கு 10வயதில் ஆதிகேசவன் என்ற மகன் இருக்கிறார். அங்குள்ள அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் ஆதிகேசவன், தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை காலம் என்பதால், சின்னாறு  கிராமத்தில் உள்ள  உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

வீட்டில் நேற்றிரவு செல்போனில் சார்ஜ் போடபட்டிருந்தது. அப்போது சார்ஜ் செலுத்தி கொண்டிருந்த சைனா செல்போனை எடுத்து  ஆதிகேசவன்  கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் ஆதிகேசவனின் முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, உறவினர்கள் அதிகேசவனை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கைவிரல்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகேசவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுவர்களிடம் செல்போன் கொடுக்க வேண்டாம். செல்போனை சார்ஜ் போட்டிருக்கும் போது சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களூம்  எடுத்து உபயோக படுத்தக்கூடாது எனக் கூறினர்.

கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து சிதறி மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy: VIKATAN

Advertisement

Close