தொடரும் சிவசேனாவின் மதவெறி.. குடும்பத்துடன் ஹோட்டலில் அடைக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர்

image

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி மும்பையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதுவும் மும்பையில்தான் நடைபெற்றது.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங்க் மனோகரை மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ. தலைமைக் கட்டிடத்தில் சந்தித்து பேச இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா கட்சியினர், பி.சி.சி.ஐ. கட்டிடத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு பாகிஸ்தான் நடுவர் ஆலீம் தாரை ஐ.சி.சி. திரும்பப்பெற்றது. வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வர்ணனை பணியில் இருந்து விலகினர்.

இந்நிலையில்தான் பாகிஸ்தானில் பிறந்த இம்ரான் தாஹிரை மும்பையில் தங்கியிருக்கும் ஓட்டலை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தாஹிர் தனது மனைவி சுமாய்யா தில்தார் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் இந்தியா வந்துள்ளார். மும்பையில் தங்கிருக்கும்போது ஹோட்டலில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டாக தகவல் தெரிவிக்கின்றன. எதிர்பாராதவிதமாக எந்தவொரு சம்பவமும் நடைபெற்ற விடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

தாஹிர் மும்பையில் தனது குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து சில மால்களில் ஷாப்பிங் செய்ய இருந்ததாகவும், புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவிற்கு செல்ல இருந்ததாகவும், மும்பையை பற்றி கேட்டுக்கொண்டு சுற்றிப்பார்க்க விருப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஹிர் மனைவி சுத்த சைவம் என்பதால் அருகில் உள்ள ஓட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு சாப்பிட்டுள்ளார். வெளியில் செல்லமுடியாத நிலைமையால் அருகில் உள்ள ஹோட்டலில் நேரில் சென்றுகூட சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாஹிர் பாதுகாப்பு குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் ஊடக மானேஜர் கூறுகையில் ‘‘தாஹிருக்காக குறிப்பிட்ட விசேஷ பாதுகாப்பு ஏதும் செய்யப்படவில்லை. மற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புதான் வழங்கப்பட்டது’’ என்றார்.

Close