Adirai pirai
posts

இனிக்கும் இல்லறம் -8

இன்றைய சமூக சூழலில் குடும்பத்திற்கு அந்தஸ்தை பெற்று தரும் காரணியாக பொருளாதாரம் மாறிவிட்டது. ஏனெனில் இன்றைய வாழ்க்கைப் போராட்டங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஆகவே குடும்ப வாழ்விலும் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சர்யமில்லை.
இல்லறத்தில் மகிழ்ச்சி தொடர வேண்டுமானால் அதன் பொருளாதார கட்டமைப்பு வலுவுள்ளதாக இருப்பதோடு, ஒழுங்காக பேணப்படுதல் வேண்டும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றவாறு செலவுச் செய்யும் மனைவி அமைந்துவிட்டால் குடும்ப மகிழ்ச்சி நீடிக்கும். இல்லையெனில் அங்கு குழப்பம் உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்!
மாலை 6 மணி அளவில் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் அஸ்மா. நகரத்தை விட்டு வெளியே அமைந்துள்ள ரெசிடெண்ட் ஏரியாவில் உள்ள ஃப்ளாட்டில் அஸ்மாவின் குடும்பம் வாடகைக்கு வசிக்கிறது. அஸ்மாவும், கணவர் ஹைதரும் வெவ்வேறான தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 2-ஆம் வகுப்பு படிக்கும் சுஹைல் என்ற ஒரு மகனும் அவர்களுக்கு உண்டு.
தனது ஃப்ளாட்டிற்கு எதிர் ஃப்ளாட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் அஸ்மா. சுஹைல் பள்ளிக்கூடத்தை விட்டு 3.30-க்கே வந்துவிடுவான். தங்களுக்கு முன்னே வந்துவிடும் சுஹைலை எதிர் ஃப்ளாட்டில் வசிக்கும் ஆயிஷாவிடம் தான் வரும் வரை சற்று கவனித்துக்கொள்ள சொல்லியிருந்தாள் அஸ்மா.
புன்சிரிப்புடன் ஸலாம் கூறி கதவைத் திறந்த ஆயிஷா, என்ன அஸ்மா இன்னைக்கு லேட்? என வினவியபொழுது, “கம்பெனி பஸ் இன்னைக்கு லேட் அதுதான் கொஞ்சம் வர தாமாதமாகிவிட்டது  தாங்க்ஸ் ஆயிஷா” எனக் கூறியவாறு தூங்கிக்கொண்டிருந்த சுஹைலை தூக்கிக்கொண்டு தனது ஃப்ளாட்டிற்கு வந்தாள்.
ஆயிஷாவுக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால், சுஹைலிடம் அதிகம் பாசம் காண்பிப்பாள். அது அஸ்மாவுக்கும் வசதியாக போச்சு. காலிங் சத்தம் கேட்க அலுப்புடன் கதவைத் திறந்த அஸ்மாவுக்கு ஸலாம் கூறியவாறு சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தார் ஹைதர்.
“அஸ்மா ஒரு கப் டீ கொடும்மா! தலைவலியா இருக்கு”,
“வர்ற வழியில சாப்பிட்டிருக்கலாமே! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு!  நீங்க போட்டு குடிங்க!ப்ளீஸ்!”
‘சரி’ என்ற ஹைதரின் முகத்தில் எரிச்சல் தெரிந்தது.
“என்னங்க! இன்னைக்கு நைட் டின்னருக்கு பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரெண்ட் போகலாம்!”
“இவளுக்கு இதே வேலையாப்போச்சு!” மனதிற்குள் எட்டிப்பார்த்த கோபத்தை அடக்கினான் ஹைதர். ஏனெனில் ஏதாவது பேசினால் அஸ்மாவின் அடுத்த பதில் “அப்ப நாளைக்கு நான் வேலைக்குப் போகமாட்டேன். வீட்டை கவனிச்சுக்கிறேன். என்னால இரண்டு வேலையும் பார்க்கமுடியாது.” என கூறுவாள். எதுக்கு வம்பு என அமைதியானான். ஹைதரின் வற்புறுத்தலின் பேரில்தான் அஸ்மா வேலைக்கு செல்கிறார்.
இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் இருவரின் சம்பளம் இல்லையெனில் செலவுகளை ஈடுகட்டுவது மட்டுமல்ல மாறிவரும் உலகில் வாழ்க்கை வசதிகளை பெருக்குவதும் சிரமம் என கூறித்தான் அஸ்மாவையும் வேலைக்கு அனுப்பினான் ஹைதர்.
மறு நாள் காலை சுஹைலுக்கு கடுமையான காய்ச்சல். அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது யார் என்பது இருவருக்கும் பெரிய பிரச்சனை. கடைசியில் அஸ்மாவிடம் அரைநாள் லீவு எடுக்க கூறிவிட்டு அலுவலகம் சென்றான் ஹைதர். ஆனால், சுஹைலின் காய்ச்சல் விட்டபாடில்லை. இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்தால்தான் சரியாகும் என மருத்துவர் கூற ஆளுக்கு ஒருநாள் லீவு போட்டார்கள் தம்பதியினர் இருவரும்.
சுஹைலுக்கு காய்ச்சல் விட்டபோது அஸ்மாவுக்கும், ஹைதருக்கும் இடையே புகைச்சல் துவங்க ஆரம்பித்தது.
இக்கதை இவ்விடத்தில் நிற்கட்டும்.
பெண்கள் வேலைக்குப் போதல் ஒருவித ‘சமூக அந்தஸ்து’ பேணல் என்பதை விட குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான காரணங்களே முன்னிலை வகிக்கின்றன. மேலே கண்ட கதையில் தம்பதியினர் இருவரும் தங்களது வாழ்க்கை தேவைகளை ஈடுகட்ட வேண்டும் என்பதையும் தாண்டி இன்னும் அதிகம் சம்பாதித்தால் இன்னும் வசதிகளை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில்தான் மனைவியை வேலைக்கு அனுப்புகிறான் ஹைதர். ‘பெண் வேலைக்குச் செல்லக்கூடாது! அவள் வீட்டிலேயே முடங்கி இருக்கவேண்டும்!’ என்ற கருத்தில் இதனை நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் பெண்ணைப் பொறுத்தவரை ஆணை விட அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளும், கடமைகளும் குடும்பத்தின் மீது உள்ளன. ஒரு வீட்டின் நிர்வாகம் என்பது பெண்ணை சுற்றியே உள்ளது.
இப்பொழுது கற்பனைச் செய்து பாருங்கள்! அலுவலகத்தில் வேலைப்பழு, சில வேளைகளில் உயர் அதிகாரிகளின் ஏச்சு, அலுவலகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் இவையெல்லாம் தாங்கிவிட்டு மன அழுத்தத்தோடு வீட்டிற்கு வரும் கணவனை மகிழ்ச்சியுடன் காத்திருந்து வரவேற்று அவனுக்கு ஆறுதல் கூறி சூடாக காப்பி அல்லது டீ போட்டுக் கொடுத்து ஆசுவாசப்படுத்தும் பொழுது அந்த குடும்ப சூழலின் நிலை எவ்வாறிருக்கும்! பள்ளிக்கூடம் சென்று மாலை வீடு திரும்பும் மகன் அல்லது மகளை கொஞ்சி மகிழ்ந்து, உடைகளை மாற்றி, தூய்மைப்படுத்தி, உணவு ஊட்டி மார்க்க பாடசாலைக்கு அனுப்புவதில் ஏற்படும் மகிழ்ச்சியை விட ஒரு தாய்க்கு என்ன வேண்டும்?
இன்று கூட்டுக்குடும்பம் என்பது அருகி தனிக் குடும்ப வாழ்க்கை அதிகரித்துவரும் காலக்கட்டத்தில் கணவனுடன், மனைவியும்
வேலைக்குச் சென்றால் குழந்தையின் நிலை என்ன ஆகும்? ஆனால் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். மனோதத்துவ நிபுணர்களின் ஆய்வின் படி, ஒரு குழந்தை தனது தாய் வேலைக்குச் செல்வதை விரும்பவில்லையாம். இன்று நகரங்களில் ‘பேபி ஸிட்டிங்’ வைத்துள்ளார்கள். பச்சிளம் குழந்தைகளையும் அங்கே விட்டுச்செல்லும் காட்சியையும் நாம் பார்க்கிறோம். இந்நிலையில் குழந்தைக்கு தாய் மீது எவ்வாறு பாசம் வரும்? பிற்காலத்தில் பெற்றோர் ஒரு சுமையாகவே பிள்ளைகளுக்கு மாறிவிடுவார்கள். விளைவு முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும். இது தேவையா?
சரி கட்டுரையை திசை மாற்ற விரும்பவில்லை. விஷயத்துக்கு வருவோம்.
ஒரு குடும்பத்தில் கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால், குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களான கணவனும், மனைவியும் ஒரு திட்மிட்ட முறையில் செலவு விவகாரங்களைக் கையாளாத போது பிரச்சினைகள் தலைதூக்கும். இந்த விஷயத்தில் குடும்பத் தலைவியின் பங்களிப்பே முக்கியமாகும். வரவுக்கு மீறி செலவுகள் மிகைக்கும் போது எந்தக் குடும்பத்திலும் முரண்பாடுகள் தானாகவே உருவாகும். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுதலும் அதைத்தொடர்ந்து குடும்ப அமைதியும் சீர்குலைந்து விடும். இல்லறத்தில் இனிமை என்பது கேள்வி குறியாகும். ஆகவே பொருளாதாரத்தை முறையாக கணவனும், மனைவியும் கையாளவேண்டும்.
இன்றைய சமூக சூழலில் தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களின் வாழ்க்கையை கூட தடுமாற வைத்துள்ளது. கடன் வாங்காமல் சம்பாதித்தை கொண்டு வாழ்க்கையை நிம்மதியாக கழிப்பது நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால், இன்றோ தான் விரும்பிய பொருட்களை கடன் வாங்கியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற வெறி குடும்பத்தில் காணப்படுகிறது. இதுதான் புதிய தலைமுறையின் சித்தாந்தம் போலும்.
வங்கியில் கடன் வாங்கி கனவு உலகில் சஞ்சரித்து ஆடம்பர பொருட்களை வாங்கி கோலாகலம் நடத்திவிட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவமானப்படுவதும், சிலர் தற்கொலை முடிவை எடுப்பதையும் கண்டு வருகிறோம். பணம் சம்பாதிக்கும் வெறியில் பல பெற்றோர்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ முடியவில்லை. அவர்களை நேரான வழியில் நடத்திச் செல்லவும் முடிவதில்லை. இதனால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி என்பது பொருளாதார தேடலின் அவசரத்தில் கானல் நீராக மாறிப்போகிறது.
பொருளை சம்பாதிக்க வேண்டும். அது இல்லாமல் இல்லற வாழ்க்கையில் இன்பம் ஏது? ஆனால் வரம்பை மீறிவிடாதீர்கள். வாழ்க்கை தேவைக்கு தான் சம்பாதிக்கிறோம். சம்பாதிப்பதற்காக வாழ்க்கை அல்ல. இரவு, பகல் பாராமல் உழைத்து சம்பாதிக்கும் மனோநிலை பலரையும் மனநோயாளிகளாக மாற்றிவிடும். கடைசியில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தேடினால் அது கிடைக்காது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நமக்கு தெரியவேண்டும்.
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்..) அவர்களின் வாழ்க்கையை சற்று கவனித்துப் பாருங்கள்! அவர்கள் என்ன செல்வ சீமானா? ஆனாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் குதூகலம் பூத்துக் குலுங்கியதே! ஒரு பல்கலைக்கழகமாக அல்லவா நமக்கு பாடங்களை கற்றுத் தந்துவிட்டு சென்றுள்ளார்கள்! அங்கே பணமா முக்கியத்துவம் பெற்றது?
நபிகளாரின் இப்பொன்மொழி நமது கண்ணைத் திறக்கட்டும். அதுவே பொருளாதார காரணிக்கு உரிய தீர்வாகவும் அமையும்!
“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்”.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6446
அடுத்து விட்டுக்கொடுத்தல் இதுக்குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்….

Advertisement