அய்மான் விழா , அபுதாபியில்

kalam readspoem 3kalamreads poem 5

ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்ச்சி

அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் நடைபெற்றது

ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்ச்சி அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள Ruchi Restaurant Baunqet ஹாலில் நேற்றிரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன், பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் முஹம்மது இத்ரீஸ் மரைக்காயர் இறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

அய்மான் சங்கச் செயலாளர் லால்பேட்டை அப்துல்ரஹ்மான் ரப்பானி வரவேற்புரையாற்ற, சங்க பொதுச்செயலாளர், காயல் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சியைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

அதிரை, கவியன்பன் கலாம் சிறப்புக் கவிதைகளை வாசித்தார்.

அய்மான் சங்கத்தின் கீழை, சையது ஜாஃபர் திருச்சியில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நடப்பறிக்கை நிகழ்த்த, ஹிஜ்ரா வரலாற்றைக் காயல் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமானியும், சென்னையில் இயங்கி வரும் இக்ராஃ அகாடமியின் நிறுவனமான கேப்டன் மத்தீன் ரப்பானி சிறப்புரையாற்றினார்.

எஸ் – ஐஏஎஸ் அகாடெமியின் செயல் இயக்குனரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச்செயலாளருமான, பேராசிரியர், முனைவர் சேமுமு முஹம்மது அலி கல்வி- ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தைக் குறித்து விளக்கி நிறைவு பேருரையாற்றினார்.

அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றியுரை நிகழ்த்த, ஷர்ஃபுத்தீன் மன்பஈ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், இந்திய முஸ்லிம் பேரவை (IMF), அமீரகக் காயிதேமில்லத் பேரவை, மௌலிது கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகளும், பல்வேறு ஊர்களைச் சார்ந்த சகோதரர்களும் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்க நிர்வாகிகள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான கீழை ஜமால், திருவாடுதுறை அன்சாரி பாட்ஷா, காயல் ஷேக்னா, காயல் அன்சாரி, களமருதூர் ஷர்ஃபுத்தீன், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மன்பஈ, ஆடுதுறை அப்துல் காதர், நாகூர் ரஷீத் மரைக்காயர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, கீழை ஃபஹ்ருல் பையாஜ், லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

கவியன்பன் கலாம் பாடிய கவிதைகள்:

1) அய்மானும் நானும்

உங்களில் ஒருவனாய் அறிமுகம்

ஓரத்தில் உட்கார்ந்த பார்வையாளன் போலிருந்தநான்

அய்மான் காட்டும் கவிமுகம்

மேடை ஏற்றி என்னை

மேன்மையுடன் அரவணைத்து ஊக்கமென்னும் அமுதூட்டும்

அய்மான் என்றன் அன்னை

சேவைகளில் தொடக்கப் பள்ளி

செய்துமுடித் திருப்பதோ திருச்சியிலே கல்லூரி

ஏழைகளின் விடியல் வெள்ளி

கண்ணைக் காக்கும் இமையாய்க்

கல்வியெனும் கண்ணையெங்கள் பெண்கட்குத் திறந்தீரே

இல்லை கல்விச் சுமையே

குர் ஆன் ஒலிக்கும் நாடா

குவலயமே கேட்கவைத்த துவக்கத்தை மறந்திடுமோ

எவரின் நினைவு நாடா?

எங்கும் எதிலும் இணக்கம்

ஏழைகட்கு உதவிடவே பைத்துல்மால் நிதியகமும்

அண்மையில் அய்மான் துவக்கம்

ஒன்றாய் இருந்தால் நன்று

ஒற்றையான கோரிக்கையை அய்மானும் வேண்டியதால்

ஓரணி காண்போம் இன்று

அக்கரை விட்டு பறந்தோம்

அக்கறையுடன் தாயகத்தை நேசிக்க அய்மானில்

இணைந்து கவலைகள் மறந்தோம்

2) கல்வி

திருமறை கூறும்

….திடமான கட்டளை

.திருநபி கூறும்

…””தொலைவான ஒட்டகம்””

அகிலத்தின் காட்சிகளை

…..அறிவிக்கும் முன்னோடி

அகிலத்தைக் காண்பதற்கு

…அணிகின்ற கண்ணாடி

சிந்தைப் பூட்டைச்

..சிறப்பாய்த் திறந்திட

விந்தை மிக்க

..விரைவுத் திறவுகோல்

சுரந்து வழியும்

…சுனைவழியின் தொடராம்

பரந்து விரியும்

….பகுத்தறிவின் சுடராம்

மிதக்கும் ஒளியாம்

..மின்னல் கீற்றாம்

செதுக்கும் உளியாம்

..சொர்க்கக் காற்றாம்

மூளையின் உணவாகும்

…முழுமையான கல்வி

மூளையே உணவாகும்

….முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்

…ஊற்றுக் குழியாம்

அள்ளக் குறையா

…ஆற்றுச் சுழியாம்

உலகம் சுற்றுவதும்

…உலகத்தைச் சுற்றி

பலனைக் கற்றுதரும்

… பலமான கல்வி

மண்ணில் கைவைத்து

….மனிதன் கற்றது

விண்ணில் கால்வைத்து

..வியப்பைப் பெற்றது

எல்லையும் வயதும்

…இதற்கு மட்டும்

இல்லையே மனிதா

…இறப்பில் முற்றும்

மரணம் முடிக்கும்;

….மடைமை ஒழிக்கும்;

இரந்தும் படித்தால்

…இயலாமை அழிக்கும்

செல்வமும் வீரமும்

….செழித்து வளர

கல்வியின் வீரியம்

….கடவுள் வரமாம்

சென்ற இடமெலாம்

…..செழித்திடும் வெற்றியாம்

வென்று பெறுபவர்

……வியத்தகு கல்வியால்

Close