புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?

adirai myshaதாவது அடுத்தவன் குறை காண்பவன் அரை மனிதன் தன் குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை அலசி ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?

பொதுவாக உலக நடைமுறைப் பேச்சில் சில செய்திகளுக்கு உதாரணம் காட்டி பேசும்போது அடுத்தவர்களின் நடவடிக்கையை சுட்டிக் காட்டியபடியும், வேறு ஏதாவது சம்பவங்களை காரணம் காட்டி இணைத்துப் பேசுவதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இதுவும் ஒருவகையில் புறம்பேசுவது போன்றுதான்.ஆனால் இப்படிப் பேசி பழக்கப்பட்டு போய்விட்டதால் இதை அதிகபட்சம் நாம் புறம்பேசுவதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் ஒருசிலரை பார்த்திருப்போம். சதா அடுத்தவர்களுடைய செயல்பாடு, குறைபாடு, நடவடிக்கையை ,வாழ்க்கை விசயங்களை கண்காணிப்பதும், அதனைப்பற்றி பின்னால் இருந்து விமரிசிப்பதும் அதுமட்டுமல்லாமல் சில நடக்காத சம்பவங்களையும் சேர்த்து அல்லது மிகைப்படுத்தி பேசுவதும் அவர்களை குறித்து சமுதாயத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்ப்படும்படி கலங்கப்படுத்தியும் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

இது முற்றிலும் தவறான போக்கு மட்டுமல்ல. தவிர்த்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.ஒருமனிதனைப் பற்றி அவர் இல்லாதபோது புறம்பேசுவது தனது சொந்த சகோதரனின் மாமிசத்தை சுவைப்பதுபோன்று என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது. அப்படியானால் புறம்பேசுவது எந்த அளவுக்கு மோசமான செயல் என்பதினை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் தன்னை புறம்பேசுவதை அறிந்த ஒருவர் மனவேதனை அடைந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை இறைவன் ஒருபோதும் அவர்களை மன்னிப்பதில்லை.

இது அப்படி இருக்க சாதாரணமாக நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் புறம்பேசுதல் என்பது ஒரு மனிதாபிமானம் இல்லாத மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட செயலாகவே இருக்கிறது.இப்படி புறம்பேசும்போது ஒரு நல்ல மனிதர் மனிதாபிமானம் உள்ள மனிதர் காதில் கேட்பாராயின் காரி உமிழ்வார்கள். புறம்பேசுபவர் என்று தெரிந்தால் நல்லமனிதர் இனிமையானவர் என்ற நற்ப் பெயர் மறைந்து சமுதாயத்தார்களுக்கு மத்தியில் வெறுப்பிற்க்குரியவர்களாகி விடுவார்கள்.

இதிலிருந்து அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டும் புறம்பேசிக் கொண்டிருப்பது பலவீனமான செயலாகும் என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த உலகம் இந்த வாழ்க்கை எதுவும் நிலையானதல்ல. மரித்து மண்ணோடுமண்ணாக மக்கப்போகும் இவ்வுடலை மண்ணும் மனம்பொருந்தித் தின்னவேண்டும். இப்படி புறம்பேசி அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளானோமேயானால் இந்த உடம்பை எப்படி மண் திங்கும்.? இதையெல்லாம் சற்று யோசித்தால் மறந்தும்கூட அடுத்தவர்களை யாரும் புறம்பேசமாட்டார்கள்.

முகத்துக்கு முன்னாள் ஒருமனிதனின் தவறுகள், குறைபாடுகளையும் சுட்டிக் காண்பித்து முகத்துக்குப் பின்னால் அம்மனிதனின் நிறைவுகளை புகழ்ந்து பேசுபவர்தான் உண்மையான நல்லலெண்ணம் கொண்ட சிறந்த மனிதர்களாவர்.

புறம்பேசுவதால் அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்திற்கும் ஆளாகுவதுடன் மேலும் பகைமையை வளர்த்துக் கொண்டு பலவகையிலும் நமக்கு கேடுவிளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. ஆகவே எந்தப் புண்ணியமும் இல்லாத இத்தகைய புறம்பேசும் போக்கை கைவிட்டு எதுவாயினும் சம்மந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் கேட்டறிந்து உண்மை நிலையை அறிந்துகொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டு சமூகத்தார் மத்தியில் புறம்பேசாத நல்லமனிதர் என்கிற களங்கமில்லாத நற்பெயரை நிலைநாட்டிக் கொள்வோமாக.!!!

ஆக்கம்: அதிரை மெய்சா

Close