அதிரை பிறையின் தொடர் செய்திகளின் எதிரொலி! தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் பகுதிக்கு விடிவுகாலம் (படங்கள் இணைப்பு)

bilal nakarஅதிரை பிலால் நகர், தென் தமிழகத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அதிரைக்கு வருபவர்களுக்கு இதுதான் நுழைவாயில். இங்கு சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அன்றாடம் வேலை செய்து வரும் கூலித்தொழிலாளிகள், கடைகளில் வேலை செய்யும் எளிய மக்கள். இப்பகுதியில் அதிகம் குடிசை விடுகளே உள்ளன. இதனை அதிரையின் ஒரு பகுதி என்று பலரால் அறியப்பட்டாலும் இது ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டாகவே உள்ளது. எனவே இப்பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கிடைக்காமலே சென்று விடுகிறது.

நாமெல்லாம் மழைக்காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் இப்பகுதி மக்களுக்கோ மழைக்காலம் என்றால் கஷ்டமும் வேதனையும் தான் மிச்சம். மிகவும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் இருப்பதனாலும், பழுதடைந்த சாலைகளினாலும் இப்பகுதியில் லேசான மழைக்கே தண்ணீர் வெள்ளமென வீதிகளை சூழ்ந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழைக்கும் இதே நிலைமை தான் இங்கு.

மேலும் இந்த தெருவில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் இங்குள்ள சில வீடுகளில் சாலைகளில் தேங்கிய மழை வீட்டுக்குள் செல்லும் நிலையும் உள்ளது. மேலும் குடிசை வீடுகள் அதிகம் உள்ள பகுதியான இதில் மழை நீர் வீட்டுக்குள் நுழைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நமது அதிரை பிறையில் பல்வேறு பதிவுகளை பதிந்துள்ளோம். இதனை நீங்களும் படித்திருப்பீர்கள். இந்த மழை காலம் துவங்கியது முதல் பிலால் நகரின் அவலத்தினை பிற தெரு மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் பதிவுகளை தொடர்ந்து பதிந்துள்ளோம். இதனை பதிவதோடு மட்டுமல்லாமல் முதலமைச்சரின் CM CELL இணையதளத்திலும் புகார் அளித்தோம். இது போல் அதிரை 8 வது வார்டு கவுன்சிலரும் சமுக ஆர்வலருமான சேனா முனா ஹாஜா முஹைதீன், மற்றும் காதிர் முகைதின் கல்லூரி முதல்வர் முனைவர் A.ஜலால், துணை முதல்வர் முனைவர் உதமான் முஹைதீன் ஆகியோரும் பல முறை மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து புகார் அளித்து வந்தார்.

இதனை அடுத்து இன்று கலெக்டரின் உத்தரவின் பேரில் அதிரை பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரியின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையோரம் புதர்களால் மண்டிக்கிடக்கும் வடிகாலை தூர்வாரும் பணி துவங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த வடிகால் வழியாக பிலால் நகரில் தேங்கியுள்ள தண்ணீர் காதிர் முஹைதீன் பள்ளியின் எதிர்புரமாக ஏரிப்புறக்கரை சாலையில் செல்லும் வடிகால் வழியாக நேராக சென்று கடலில் கலக்கும். இதன் மூலம் பிலால் நகரில் தேங்கியுள்ள தண்ணீரை குறைக்கலாம்.

இந்த பணியின் போது ஏரிப்புறக்கரை பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், கல்லூரி அலுவலர் எம்.தங்கபிரகாசம், கல்லூரி கண்கானிப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன், இஸ்லாமிய ஜனநாயக முன்னனி அதிரை நகர தலைவர் முஹம்மது முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Close