அலாய் வீல்… நன்மை!தீமைகள்!

மொக்கை பைக் / காரைக்கூட, சூப்பர் லுக்கில் காட்டக்கூடிய வல்லமை கொண்டது அலாய் வீல். சாதாரண ஸ்போக் மற்றும் ஸ்டீல் வீல்களுக்கு இப்போது மவுசு போய்விட்டது. எனவே, இப்போது எல்லோரது சாய்ஸும் அலாய் வீல்கள்தான்! அப்படிப்பட்ட அலாய் வீல்களின் நன்மை, தீமை என்ன?

நன்மைகள்:


1. அலாய் வீல்கள், முதலில் ஸ்கோர் செய்வது அழகில்தான். அலாய் வீல் பொருத்திய ஆல்ட்டோகூட, ஆஸ்ட்டன் மார்ட்டின் கார் போல ஜொலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. எனவே, அழகு வேண்டும் என்பவர்கள் அலாயைத் தேர்ந்தெடுக்கலாம்.

2. அலுமினியத்தால் தயாரிக்கப்படும் அலாய் வீல்கள் எடை குறைவாக இருப்பதால், பெர்ஃபாமென்ஸ், பிரேக்கிங், மைலேஜ் போன்றவற்றில் இவற்றை அடித்துக்கொள்ள ஸ்டீல் வீல்களால் முடியாது.

3. மெக்னீஷியத்தால் தயாரிக்கப்படும் சில அலாய் வீல்கள், செம ஸ்ட்ராங். எவ்வளவு பெரிய பள்ளங்களையும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது. இவற்றில் சாதாரணமாக பெண்ட் ஏற்படாது.

4. ஸ்போக் / ஸ்டீல் வீல்கள் போல, எளிதில் சூடாகிவிடக்கூடிய தன்மைகொண்டவை அல்ல அலாய் வீல்கள். எனவே, சாதா வீல்கள் போல துள்ளிக் குதிக்கும், சறுக்கும் அபாயம் அலாயில் இல்லை. டயர்களுக்கும் நீண்ட நாள் வாழ்க்கை கிடைக்கும். பிரேக் அடித்தவுடன் தடாலென சில கார்கள் நிற்பதற்கு அலாய் வீல்களும் ஒரு காரணம்.

5. ட்யூப்லெஸ் டயர்களுக்கு அலாய் வீல்கள் எளிதில் செட் ஆகிவிடும். அலாய் வீல் பொருத்திய டயர்களில் காற்று அவ்வளவு சீக்கிரம் இறங்காது.

தீமைகள்

1. ஸ்போக் வீல்கள் பள்ளங்களில் இறங்கி பெண்ட் ஆனால், பெண்ட் எடுப்பதோ, ஸ்போக் மாற்றுவதோ ஈஸி. ஆனால், அலாய் வீல்கள் பெண்டானால், முழு வீலையும் மாற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

2. சாதாரண வீல்களைவிட 60 முதல் 80 சதவிகிதம் வரை காஸ்ட்லியானவை அலாய் வீல்கள். எனவே, செலவு அதிகம்.

3. அலாய் வீல்கள் அழகாக இருப்பதால், திருட்டு பயமும் உண்டு. ‘என் பைக்ல வீலை மட்டும் கழட்டி எடுத்துட்டாய்ங்க சார்’ என்பவர்களும் இருக்கிறார்கள்.

4. அலுமினியம் அலாய் வீல்களில், ஸ்டீல் வீல்கள் அளவுக்கு உறுதித்தன்மை இருக்காது.

Advertisement

Close