தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

ramananநாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை மற்றும் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீன தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 மற்றும் 30ம் தேதிகளில் மழை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் உள்ளிட்ட வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனிடையே மழை வெள்ள பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Close