Adirai pirai
தமிழகம்

சென்னை சென்ட்ரலின் கலர் வெள்ளையாக மாற்றப்பட்ட காரணம் இதுதான்

image

சென்னையின் அடையாளங்களுள் ஒன்று, செஞ்சிவப்பு நிற சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டிடம். மதறாஸ் – வியாசர்பாடி உருவாக்கத்தின் போது சென்னையின் இரண்டாவது ரயில் நிலையமாக 1853-ல் ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது சென்னை சென்ட்ரல். ஆச்சர்யம் என்னவென்றால் சென்ட்ரலுக்கு வயது தற்போது 162. ஆனாலும் அதன் பொலிவு கொஞ்சமும் குறையவில்லை.

சிமெண்ட், செங்கற்கள், இரும்புக் கம்பிகள் போன்றவைகளின் துணையுடன் எழுப்பப்படும் கட்டடங்கள், அடுக்குமாடி வணிக வளாகங்கள், பங்களாக்கள் இப்படி எதுவாயினும் அவைகளின் ஆயுள் தோராயமாக 30 முதல் 40 ஆண்டுகள் மட்டுமே. (விதிவிலக்காக தமிழகத்தில் கட்டும்போதே விழும் கட்டடங்களும் உண்டு.) அந்தக் காலத்துக்குப் பிறகு அவற்றை இடித்துவிட்டு புதிதாகக் கட்டாவிட்டால், எந்த நேரம் இடிந்து விழுமோ என்ற பீதியில் கட்டட உரிமையாளர்கள் இருக்கவேண்டியதுதான்.

ஆனால், 162 ஆண்டுகளைக் கடந்தும் ஆண்டுக்கொரு முறை காரை எனும் மேற்பூச்சு வண்ணத்தை மட்டுமே பூசிக்கொண்டு கம்பீரம் காட்டி நிற்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

இந்த வருடத்திற்கான ‘அடையாள’ புதுப்பிப்பு’ ஒரு வாரத்துக்கு முன்னர் சென்ட்ரலில் தொடங்கப்பட்டது. இடைவிடாத மழையின் காரணமாக முதலில் சுத்தம் செய்யும் பணியை மட்டுமே தொடங்கிய ஊழியர்கள்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் மழை சற்று வெறிக்கவும், வண்ண மேற்பூச்சு வேலையை தொடங்கினர்.

பணிகளின்போது முகப்பை பிரம்மாண்ட திரைச்சீலை கொண்டு மறைக்காமல் இரவு வேளைகளில் மட்டும் வண்ணம் பூசும் வேலைகள் நடக்கும். சென்ட்ரலின் முகப்பு, ‘ஒளிர்ந்த காவி- சிவப்பு’ வண்ணத்தில் இருக்கும் நிலையிலேயே வைப்பதற்கு முன், வெளிர் சாக்லேட், வெளிர் வயலெட் கலர்களில் ஆரம்பகட்ட வண்ணப்பூச்சு நடக்கும். ஒரு கலர் காய்ந்து முடிப்பதற்குள், அடுத்த கலர் அடிக்கப்பட்டு விடும். அதன் பின் காவி-சிவப்பு வண்ணத்தை நன்றாக கொண்டு வருவதற்கு முன் ‘மில்க் வொய்ட்’ கலரை அடிப்பார்கள்.

முந்தைய வருடங்களில் ‘சென்ட்ரல் ஏன் கலர் மாறியிருக்கு?’ என்று யாரும் கேள்வி கேட்பதற்கு முன் இந்த வண்ண பூச்சு வேலை துரிதமாக நடந்து முடிந்து, வழக்கமான காவி-சிவப்பு நிற போர்வை போர்த்திக்கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் சென்ட்ரல்.

ஆனால், இந்த முறை ‘மில்க்- வொய்ட்’ வண்ணப் பூச்சு முடிந்த கையோடு பழைய ( காவி-சிவப்பு) கலருக்கு சென்னை சென்ட்ரலை மாற்ற முயன்றபோதுதான், விட்ட மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. இதனால், ஊழியர்கள் அதற்கு மேல் பணிகளை தொடரமுடியாமல் நிறுத்திவைத்துவிட்டனர். இதனால் சரித்திரத் திலேயே இல்லாதபடி தொடர்ந்து ஐந்தாவது நாளாக மில்க்-வொய்ட் கலரிலேயே தொடர்ந்து காட்சியளிக்கிறது சென்ட்ரல் ரயில்நிலைய முகப்பு.

இதனால், சென்னை சென்ட்ரல் இனி உஜாலா வெள்ளையாகத்தான் காட்சியளிக்குமோ என்ற விசாரணைகள்  குவிகின்றன. காவி சிவப்பு கலரிலேயே பார்த்து பிரமித்த நம்மூர் ஆட்கள் பலர், துணிந்து சென்ட்ரல் ரயில்நிலைய அதிகாரிகளுக்கே போன் அடித்து விசாரிக்க,  டயர்டாகிவிட்டார்கள் அதிகாரிகள். அதுவும், ‘சென்ட்ரல் எப்போ பழையபடி சிவப்பா மாறும் ? மெட்ரோ ரயில் சேவை இங்கே வருவதால் கலரை மாற்றி விட்டீர்களா ? அல்லது அதிகார வர்க்கத்துக்கு காவி நிறம் பிடிக்கவில்லையா?’ என்று கொதிகொதி கேள்விகளால் ரயில்வே அதிகாரிகளை வறுத்தெடுக்கின்றனர்.

“மழை விட்டதும் பழைய கலருக்கே வந்திடும்.. கவலைப்பட வேண்டாம்” – இதுதான் இப்போதைக்கு அதிகாரிகளின் பதில்!

நிஜம்தானா?

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359