பட்டுக்கோட்டையில் பதற வைக்கும் பயணம்! பறிபோகும் உயிர்கள்! பரிதவிக்கும் உறவுகள்!

pktபட்டுக்கோட்டை தஞ்சை மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகம், இந்த பகுதியில் தொடரும் வாகன விபத்தினால் இங்கு குழந்தைகளுடன் வாழ்வதே நரகமாக மாறிவருகிறது.

பட்டுக்கோட்டையில் காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மணிக்கூண்டு, அறந்தாங்கி சாலை முக்கம், வடசேரி சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டிணம் சாலையில் வாகன விபத்தில் சிக்காமல் சென்று சேர்ந்தாலே பெரிது என்னும் சூழ்நிலை தான் இருக்கிறது. அதிலும் காலை பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களை அரசு பேருந்துகள் நிறுத்தி ஏற்றுவதில்லை, அது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வில்லை. அதே போல் அறந்தாங்கி சாலை முக்கம் வழியாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் கடந்து செல்வதினால் தினம் தினம் விபத்து ஏற்படுகிறது.

இன்று காலை அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை வந்த தனியார் பேருந்தும் , வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை சென்ற மற்றுமோர் தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றதில் தஞ்சை சாலையில் விபத்து ஏற்பட்டது. நான்கு மாணவிகள் உள்பட பயணிகள் சிலர் காயப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்திற்கு காரணமான இரண்டு பேருந்து மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து தஞ்சை செல்லும் பேருந்துகள் சிலநிமிட இடைவெளியில் புறப்படுவதாலும் போட்டிபோட்டுக்கொண்டு செல்வதாலும் பட்டுக்கோட்டை முதல் தஞ்சை வரை தினம் தினம் ஏற்படும் வாகன விபத்தினை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசின் ஒப்புதலும் நிதியும் பெறப்பட்ட புறவழிச்சாலை பணியினை விரைந்து தொடங்கிட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

courtesy: madukoor media

Close