முத்துப்பேட்டையில் மாட்டினை காப்பாற்றி மக்களை கண்கலங்க வைத்த அரசு மருத்துவர்! (படங்கள் இணைப்பு)

jlதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பின்புறம் சாலை ஓரம் பசு மாடு ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல மணி நேரம் பிரசவ வழியால் கன்று போடமுடியாமல் உயிருக்கு போராடி பரிதவித்து வந்தது. மேலும் கன்றுக்குட்டியின் கால்கள் மட்டும் மாட்டின் பின் பகுதியில் தெரிந்தது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் அய்யப்பன், பேரூராட்சி பணியாளர் கார்த்தி மற்றும் கேசவன் ஆகியோர் முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்கா சூடனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் கங்காசூடன் உயிருக்கு போராடிய பசு மாட்டிற்கு முதலுதவி அளித்து ஊசி போட்டார். பின்னர் மாட்டின் பின்பக்கம் கடமையுணர்வுடன் எந்தவித அறுவெறுப்பும் இல்லாமல் கைகளை உள்ளேவிட்டு கன்றுக்குட்டியை எடுக்க முயன்றார். அதன் தலைப்பகுதி மாற்றமாகவும், கன்று மயக்க நிலையிலும் இருந்ததால் இரு உயிர்களையும் காப்பாற்ற பக்குவமாக உள் புறம் இருந்த கன்றுக்குட்டியின் கால்களை துணிகளால் கட்டி அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் இழுத்து வெளியே எடுத்தார். வெளியே எடுக்கப்பட்ட கன்றுக்குட்டி நாக்கு வெளியே வந்து சில நிமிடங்களில் இறந்துவிடும் தருவாயில் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கங்காசூடன் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்க தனது வாயால் கன்றுக்குட்டியின் வாய் மூலம் காற்றை செலுத்தி பின்னர் தலைக்கீழ் மாற்றி பிடித்து பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி கன்றுக்குட்டிக்கு மூச்சியை வரவழைத்து காப்பாற்றினார். பின்னர் மயக்க நிலையில் உயிருக்குப்போராடிய பசு மாட்டையும் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினார். தனது குட்டியையும் தன்னையும் காப்பாற்றிய மருத்தவர் மற்றும் பொதுமக்களைக் கண்டு எதுவும் சீண்டாமல் கண் கலங்கியப்படி பசு மாடு பொறுமையாக இருந்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் மத்தியில் உறுக்கமாக காணப்பட்டது. மேலும் கால் நடை மருத்துவர் கங்கா சூடனின் மனித நேயம் மற்றும் தனது கடமை உணர்வுகளைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Close