பி.எஸ்.என்.எல். மொபைல்: புதிய கஸ்டமருக்கு 80 சதம் சலுகை!!!

BSNL_LOGO-telecom-india

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தில்லியில் இன்று பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

புதிய வாடிக்கையாளர்களுக்கான பிஎஸ்என்எல் மொபைல் கட்டணங்களில் தற்போது மறுசீரமைப்பு செய்துள்ளோம். அதன்படி, புதிய வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணங்களில் 80 சதம் வரை சலுகை வழங்கப்படும்.

நிமிஷ கட்டணத் திட்டம் மற்றும் வினாடி கட்டண திட்டம் ஆகிய இரு திட்டங்களின் அழைப்புக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை பிஎஸ்என்எல் மொபைல் போன் வசதியை பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் இரு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்களின் செல்லிடப்பேசி சேவையை பயன்படுத்தி விட்டு பிஎஸ்என்எல்-லுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கும் (மொபைல் நம்பர் போர்டபிளிட்டி) இத்திட்டம் பொருந்தும்.

புதிய வாடிக்கையாளர்கள் ரூ.36-க்கான வினாடி கட்டண திட்டத்தையும், ரூ.37 மதிப்புள்ள நிமிஷ கட்டண திட்டத்தையும் வாங்க வேண்டும்.

நிமிஷ கட்டண திட்டத்தில், பி.எஸ்.என்.எல் செல்போன், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிஷத்துக்கு 10 பைசாவும் பிற நெட்வொர்க்களுக்கு 30 பைசாவும் கட்டணமாக பெறப்படும்.

அதேபோல், வினாடி கட்டண திட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்லிடப்பேசி, உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு ஒவ்வோர் 3 விநாடிகளுக்கும் ஒரு பைசாவும், மற்ற நெட்வொர்க்களுக்கு ஒவ்வோர் 3 விநாடிகளுக்கும் 2 பைசாவும் கட்டணமாகப் வசூலிக்கப்படும்.

வாடிக்காளர்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் ஏஜிஸ் பி.பி.ஓ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூகவலை தளங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீதான புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மொபைல் நம்பர் போர்டபிளிட்டி திட்டத்தின்படி 1,24,158 வாடிக்கையாளர்கள் விலகிய நிலையில், 1,57,564 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நிகழ் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை 79.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றார்.

Close